இந்திய-அமெரிக்க பேச்சு மீண்டும் பின்போடல்

India-US

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சு மீண்டும் அமெரிக்காவால் பின்போடப்பட்டுள்ளது. பின்போடலுக்கான காரணத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. நேற்று புதன் இரவு அமெரிக்கா இந்த அறிவிப்பை செய்துள்ளது. இம்முறையுடன் இந்த பேச்சு இரண்டாவது தடவையாக பின்போடப்படுள்ளது.
.
வளர்ந்து வரும் சீனாவுக்கு எதிராக இந்தியாவை இராணுவ மட்டத்தில் அமெரிக்கா வளர்க்க விரும்பினாலும், பொருளாதாரம் உட்பட மற்றைய பல விடயங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் முரணாக உள்ளன.
.
அமெரிக்கா அண்மையில் இந்தியா, கனடா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை நடைமுறை செய்தது. அதனால் இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பொருட்களுக்கு பதில் இறக்குமதி வரியை நடைமுறை செய்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளையும் வேறு பல இராணுவ பொருட்களையும் $6 பில்லியனுக்கு கொள்வனவு செய்யவுள்ளது. தற்போது அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை நடைமுறை செய்துள்ளதால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியாவை அமெரிக்கா தண்டிக்க வேண்டும். அதுவும் அமெரிக்க-இந்திய உறவை பாதிக்கும்.
.
இந்தியா உட்பட பல நாடுகளை ஈரானிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை நிறுத்தவும் கேட்டுள்ளது அமெரிக்கா. அது இந்தியாவுக்கு கடினமா ஒரு விடயம். சீனா பாகிஸ்தானில் கட்டும் துறைமுகத்துக்கு போட்டியாக இந்தியாவும் ஈரானில் ஒரு துறைமுகத்தையம் கட்டி வருகிறது.
.

தற்போது இந்தியா சென்றுள்ள அமேரிக்காவின் ஐ.நா. தூதுவர் நிக்கி ஹேய்லி முரண்பாடுகளை கட்டுப்படுத்த முனைகிறார்.
.