இயந்திரம் வெடித்த விமானம் பத்திரமாக இறங்கியது 

இயந்திரம் வெடித்த விமானம் பத்திரமாக இறங்கியது 

அமெரிக்காவின் டென்வர் (Denver) நகரத்தில் உள்ள Denver International விமான நிலையத்தில் இருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் ஹவாய் (Hawaii) சென்ற United Airlines விமானத்தின் வலது பக்க இயந்திரம் வெடித்து இருந்தாலும், விமானம் இடது பக்க இயந்திரத்தின் உதவியுடன் திரும்பி பத்திரமாக தரை இறங்கி உள்ளது.

UA Flight 328 பயணத்தை மேற்கொண்ட விமானம் Boeing 777 வகையான பெரியதோர் விமானமாகும். இதில் 231 பயணிகளும், 10 பணியாளரும் இருந்துள்ளனர்.

இயந்திர வெடிப்பின் பின் விமானி “Mayday… Mayday…” என்ற உதவிக்குரலை எழுப்பி உள்ளார். சுமார் 13,000 அடி உயரத்துக்கு மேலேறி விமானம் 23 நிமிடங்களில் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த விமான நிலையத்திலேயே தரை இறங்கி உள்ளது.

விமானம் சென்ற வழியே பல இடங்களில் உடைந்த பாகங்கள் வீழ்ந்து உள்ளன. ஒரு வீட்டின் முன் பெரியதோர் இயந்திரத்தின் முற்பகுதி வளையம் வீழ்ந்துள்ளது.

இயந்திரம் வெடித்ததற்கான காரணம் விசாரணைகளின் பின்னரே தெரியவரும்.