இலாபங்களை ஒளித்து வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள்

 

அமெரிக்காவின் சாதாரண மக்கள் தமது அரச வரிகளை செலுத்தாமல் விடுவது மிகக்கடினம். அவ்வாறு வருமானங்களை ஒளித்தாலும், அதை மோப்பம் பிடித்து பின் தண்டத்துடன் பணத்தை அள்ளி எடுக்கும் IRS என்ற அமெரிக்க அரச வரி திணைக்களம். ஆனால் பகிரங்கமாகவே தமது இலாபங்களை பெருமளவில் அந்நிய நாடுகளில் ஒளித்து வைத்துள்ளன அமெரிக்க நிறுவனங்கள். அவற்றில் முன்னிப்பது அமெரிக்காவின் பெருமை மிக்க iPhone களை தயாரிக்கும் Apple என்ற நிறுவனம்.
.
Apple நிறுவனத்திடம் தற்போது $200 பில்லியனுக்கும் ($200,000,000,000) அதிகம் காசாக உள்ளது. இதுவரை காலமும் மிக இலாபத்துடன் விற்பனை செய்யப்பட்ட iPhone மூலமான இலாபமே அது. இந்த $200 பில்லியனின் சுமார் 90% பங்கு, அதாவது 180 பில்லியன் வரை, Apple நிறுவனத்தால் வெளிநாடுகளில் வரிகள் செலுத்தாது வைக்கப்படுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய நிறுவனங்களுக்கான வரி சுமார் 35% ஆகும். அதன்படி Apple வெளிநாடுகளில் வைத்திருக்கும் தனது காசை அமெரிக்காவுக்கு மீட்பின், வரியாக சுமார் $63 பில்லியனை செலுத்தவேண்டும். அவ்வாறு வரி செலுத்துவதை பின் தள்ளுகின்றன Apple போன்ற நிறுவனங்கள்.
.
Apple மட்டுமல்ல, இவ்வாறு பல அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது பணத்தை வைத்துள்ளன. Google, Caterpillar போன்ற பல பெரு நிறுவனங்கள் இவ்வாறு செய்கிறன. இவ்வாறு அமெரிக்க நிறுவனங்களினால் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள மொத்த தொகை சுமார் $2.1 ட்ரில்லியன் ($2,100 பில்லின்) என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த $2.1 ட்ரில்லியன் பணம் அமெரிக்கா மீட்கப்படின், அது சுமார் $620 பில்லியன் வரியை அமெரிக்க அரசுக்கு வழங்கும். ஆனால் இவ்வகை வரி கிடைக்காதவிடத்து, அமெரிக்க அரசு சீனா போன்ற வெளிநாடுகளில் கடன் பெறுகிறது.
.
இந்த நிறுவனங்கள் குறைந்தது இரண்டு வழிகளில் நன்மை அடைய முனைகின்றன. முதலாவது, எதிர்காலத்தில் தமக்கு சாதகமான அரசு அமையின் அந்த அரசின் உதவியுடன் வரி வீதத்தை குறைத்து, அதன்படி குறைந்த வரி செலுத்தி தம் பணத்தை மீட்பது. இரண்டாவது எதிர்காலத்தில் தமது அமெரிக்க வர்த்தகம் நட்டம் அடையின் அப்போது இப்பணத்தை அமெரிக்கா எடுத்தல்.
.
Bermuda, Ireland, Netherlands, Luxemburg, Switzerland ஆகிய நாடுகளிலேயே இவ்வாறு அமெரிக்க நிறுவனங்களினால் பணம் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை profit shifting என்பர்.
.USFlag