ஈரான் அணுசக்தி: ஒபாமா தவிக்கிறார், இஸ்ரேல் குமுறுகிறது

Iran-US-Israel

ஈரான் அணுசக்தி உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. ஈரான் தமது அணுசக்தி உற்பத்தி மின்சக்தி போன்ற தேசநலன் பயன்பாடுகளுக்கு மட்டுமே அன்றி அணு ஆயுத பயன்பாடுகளுக்கு அல்ல என்கிறது. ஆனால் ஈரானின் பரம எதிரி இஸ்ரேல் உட்பட அமெரிக்கா நட்பு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. கடந்த சில வருடங்களாக ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மற்றைய சிறிய நாடுகளையும் பயமுறித்தி ஈரானின் மீது தடைகளை விதிக்க தூண்டுகிறது.

தடைகளின் மத்தியிலும் ஈரான் அணுசக்தி வேலைகளை தொடர்கிறது. சீனா போன்ற பலமிக்க நாடுகள் ஈரானிடம் இருந்து இப்போதும் எண்ணை கொள்வனவு செய்கின்றன. அமெரிக்கா இந்த நாடுகளை மிரட்ட முடியாது.

அதேவேளை ஒபாமாவுக்கும் உலக அரங்கில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அவா. அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட Obama Care உம் பெரிய இடர்களை சந்திக்கின்றது. தனது இரண்டாவது ஆட்சிக்காலமும் முடிவடைய உள்ள நேரத்தில் அவர் சாதித்தது மிக குறைவு.

தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஈரான் அணு உற்பத்தி ஒப்பந்தம் மூலம் ஒபாமா அரசு எதையாவது சாதிக்க முனைகிறது. ஈரான் தற்காலிகமாக அணு சக்தி உற்பத்தியை நிறுத்தினால் அமெரிக்கா பொருளாதார தடைகளை கணிசமான அளவில் தளர்த்தலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதனால் குமுறுகிறது இஸ்ரேல். இஸ்ரேல் எந்தவொரு உடன்படிக்கையும் இன்றி தனது எதிரியை மேற்கு நாடுகள் நசுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதேவளை தம்மிடம் இருக்கும் அணு ஆயுத விடயங்களில் வேறு எவரும் கதைக்க உரிமை இல்லை என்றும் கருதுகிறது.

யுரேனியம்-235 மட்டுமே அணுசக்தி மின்சக்தி மற்றும் அணுகுண்டு போன்றவற்றுக்கு பயன்படும். இயற்கை யுரேனியம் அகழ்வுகளின் 0.7% மட்டுமே யுரேனியம்-235. ஆனால் enrichment முறை மூலம் இயற்கை யுரேனியம் அகழ்வுகளின் வீதத்தை அதிகரிக்கலாம். இதற்கு centrifuges பயனபடும். அணுமின் நிலையங்கள் 3.5% enrichment செய்யப்பட்ட யுரேனியம்-235 ஐ பயன்படுத்தும். அணுக்குண்டுக்கு 90% இற்கும் மேற்பட்ட enrichment தேவை.

தற்போது ஈரானிடம் 6774 kg 3.5% யுரேனியம்-235, 186 kg 20% யுரேனியம்-235, 19000 centrifuges இருப்பதாக ஈரானின் எதிரி நாடுகாளால் கணிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் ஏதாவது ஒப்பந்தம் உருவாகினால் அது மேலே சொல்லப்பட்ட பாகங்களை குறைக்க அல்லது ஐ.நா. போன்றவற்றின் கட்டுபாட்டில் வைக்க முற்படும்.