ஈரான், சீனா 25 ஆண்டு நெருங்கிய உறவுக்கு இரகசிய திட்டம்?

Iran

ஈரானும், சீனாவும் 25 ஆண்டு கால பொருளாதரார, இராணுவ உறவு ஒன்றுக்கு திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் சீனாவுக்கு மலிவு விலையில் ஈரானின் எண்ணெய் கிடைக்க வழி செய்யும். பதிலுக்கு சீனா சுமார் $400 பில்லியன் பெறுமதியை ஈரானில் 25 ஆண்டு காலத்தில் முதலிடும்.
.
அவ்வாறு ஒரு திட்டம் நடைமுறைக்கு வருமானால், அமெரிக்காவின் ஈரான் எதிர்ப்பு திட்டம் செயலிழந்து விடும். அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவுக்கும் இது ஒரு பாரிய பின்னடைவு ஆகும்.
.
2015 ஆம் ஆண்டு ஒபாமாவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ஈரானுடன் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை பின் ஆட்சிக்கு வந்த ரம்ப் 2018 ஆம் ஆண்டு கைவிட்டு, பதிலுக்கு ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். அமெரிக்காவில் பெரும் வர்த்தகம் செய்யும் ஐரோப்பிய நாடுகளும் வேறுவழி இன்றி ஈரானுக்கு உதவாது பின்வாங்கின. இந்த சூழ்நிலை ஈரானை சீனாவிடம் நெருங்க வைத்துள்ளது.
.
தற்போது மத்தியகிழக்கில் அமெரிக்காவின் படைகளே ஆதிக்கத்தில் உள்ளன. ஈரானில் சீனா தனது படை தளங்களை நிறுவினால் அது அமெரிக்காவின் ஆளுமையை குறைக்கும். சீனா ஏற்கனவே Djibouti யில் தனது முதலாவது தூரதேச தளத்தை கொண்டுள்ளது.
.
நீண்ட காலமாக ஈரான் இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்துள்ளது. தற்போது இந்தியா ஈரானின் Chabahar என்ற இடத்தில் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்கிறது. இது சீனா பாகிஸ்தானில் நிர்மாணிக்கும் Gwadar துறைமுகத்துக்கு அருகில் உள்ளது. இந்த துறைமுகம் மூலமாக இந்தியா ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நட்பு ஆட்சிக்கு உதவ முனைந்தது.
.
மேற்படி திட்டம் நடைமுறைக்கு வருமானால், இந்தியா ஈரானின் உறவை இழக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள சாதகமான ஆட்சிக்கு உதவ முடியாது இருக்கும், இந்தியாவின் மேற்கேயும் சீன படைகள் நிலை கொண்டிருக்கும், 25 வருடங்களுக்கு சீனா மலிவு விலைக்கு எண்ணெய்யை கொள்வனவு செய்ய இந்தியா முழு விலைக்கு கொள்வனவு செய்யும்.
.
ரம்பை சந்தோசப்படுத்தும் நோக்கில் இந்தியா ஈரானில் இருந்து கொள்வனவு செய்யும் எண்ணெயின் அளவை கணிசமாக குறைத்து இருந்தது. ஈரான் இதை விரும்பவில்லை. அதேநேரம் சீன தொடர்ந்தும் ஈரானின் எணெய்யை கொள்வனவு செய்தது.
.