எண்ணெய் மீண்டும் Negative விலைக்கு செல்லலாம்

Cushing_Oklahoma

கடந்த திங்கள் (April 20th) அமெரிக்காவின் West Texas Intremediate (WTI) எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு -$37.63 ஆக குறைந்து இருந்தது. வரலாற்றில் இதுவே முதல் தடவையாக எண்ணெய் சந்தையில் negative விலைக்கு சென்றுள்ளது. அந்நிலை மீண்டும் WTI க்கு ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.
.
உலகில் பிரதானமாக இரண்டு எண்ணெய் சந்தைகள் (index) உண்டு. ஒன்று அமெரிக்காவை மையமாக கொண்ட WTI benchmark, மற்றையது உலகை உள்ளடக்கிய Brent benchmark. WTI benchmark எண்ணெய் அமெரிக்காவின் Okalahoma மாநிலத்தில் உள்ள Cushing என்ற நகரில் உள்ள சேகரிப்பு தாங்கிகளில் (storage) சேகரிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தரகர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
.
எண்ணெய் தரகர்கள் தாம் மீண்டும் விற்பனை செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னரே எண்ணெய் உற்பத்தியாளரிடம் இருந்து எண்ணெய்யை கொள்வனவு செய்வர். தரகர்கள் எதிர்கால எண்ணெய் பாவனையை கணிப்பீடு செய்தே தமது கொள்வனவை செய்வர். ஆனால் அவர்களின் கணிப்புகள் சிலவேளைகளில் தவறாகலாம்.
.
கொரோனா வரைஸ் உலகத்தை முடக்க, உலக எண்ணெய் பாவனை சுமார் 30% ஆல் குறைந்தது. அத்துடன் ரஷ்யாவுக்கும், சவுதிக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளும் எண்ணெய் உற்பத்தியை பாவனைக்கு மிகையாக அதிகரித்து உள்ளது. இரண்டும் சேர்ந்து கையிருப்பில் உள்ள எண்ணெயின் அளவை அதிகரித்தன.
.
சுமார் 70 மில்லியன் பரல்களை மட்டுமே கொள்ளக்கூடிய Oklahoma Cushing எண்ணெய் குதம் நிரம்பியதால் அங்கு தமது எண்ணெய்யை கொண்டிருந்த தரகர்கள் கடந்த செவ்வாய்கிழமைக்கு முன்னர் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தம்மிடம் போதிய கொள்கலன்கள் இல்லாத தரகர்கள் தம்மிடம் இருந்த எண்ணெய்யையும் வழங்கி, பரலுக்கு $37.63 வழங்கவும் முற்பட்டனர். அதனாலேயே எண்ணெய் விலை negative ஆனது.
.
தற்போது அமெரிக்காவின் California கடலில் மட்டும் சுமார் 20 மில்லியன் பரல் எண்ணெய்யுடன் எண்ணெய் கப்பல்கள் தரித்து உள்ளன. அங்கு எண்ணெய் பாவனை குறைந்து உள்ளதால் கப்பல்கள் தமது எண்ணெய்யை தரையிறக்க போதிய கொள்கலன்கள் இன்றி அங்கே முடங்கி உள்ளன.
.
Brent எண்ணெய் விலை தற்போது 70% ஆல் குறைந்து இருந்தாலும், அது negative விலைக்கு செல்வதற்கான நிகழ்தகவு மிக குறைவு. ஆனால் அதுவும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த விலையிலேயே உள்ளது.
.
எண்ணெய் விலை negative ஆனாலும் பாவனையாருக்கு negative விலைக்கு எரிபொருள் கிடைக்காது. காவு கூலி, அரச வரி, விற்பனை நிலைய செலவுகள் என்பவற்றால் பாவனையாளர் ஒரு குறைந்த விலையையாவது செலுத்துவர்.
.