கடந்த ஆண்டு சீன பிறப்பு 2.65 மில்லியனால் வீழ்ச்சி

கடந்த ஆண்டு சீன பிறப்பு 2.65 மில்லியனால் வீழ்ச்சி

2020ம் ஆண்டு சீனாவில் 12 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளன. 2019ம் ஆண்டு அங்கு 14.65 மில்லியன் குழந்தைகள் பிறந்து இருந்தன. அதாவது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு சீனாவில் பிறந்த குழந்தைகளின் தொகை 2.65 மில்லியனால் அல்லது 18% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2020ம் ஆண்டில் 1,000 சனத்தொகைக்கு 8.52 அங்கு குழந்தைகள் என்ற விகிதத்திலேயே குழந்தைகள் பிறந்து உள்ளன. 1963ம் ஆண்டு 1,000 சனத்தொகைக்கு அங்கு 43.6 குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறப்பு இருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் 2020ம் ஆண்டுக்கான பிறப்பு வேகமே மிக குறைந்தது.

ஒரு-குழந்தை-மட்டும் என்ற சட்டம் நீக்கப்பட்ட நிலையிலும் குழந்தைகளின் பிறப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த பிறப்பு வீழ்ச்சிக்கு கரோனா வைரஸ் தாக்குதல் காரணமா அல்லது மக்களின் வாழ்க்கை முறை மாறி உள்ளமை காரணமா என்று திடமாக கூறமுடியாது உள்ளது. பெண்கள் குழந்தைகளை பெறும் வயதை பின்போடுவதும் ஒரு காரணமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

அங்கு 800 மில்லியன் ஆக இருந்த சனத்தொகை 1,000 மில்லியன் ஆக அதிகரிக்க 12 ஆண்டுகள் எடுத்து. அந்த 1,000 மில்லியன் (1 பில்லியன்) சனத்தொகை 1,200 மில்லியன் ஆக அதிகரிக்க 14 ஆண்டுகள் எடுத்து. இறுதியில் 1,200 மில்லியன் சனத்தொகை 1,400 மில்லியன் ஆக அதிகரிக்க 24 ஆண்டுகள் எடுத்து.

சீனாவின் தற்போதைய சனத்தொகை 1.412 பில்லியன் ஆக உள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்தால், சனத்தொகை விரைவில் அங்கு வீழ்ச்சி அடைய ஆரம்பிக்கும்.