கோடியக்கரையில் இலங்கை குடும்பம் கைது

கோடியக்கரையில் இலங்கை குடும்பம் கைது

தமிநாட்டின் வேதாரண்யம் பகுதியில் உள்ள கோடியக்கரை நகரில் இலங்கை குடும்பம் ஒன்று தமிழ்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இவர்களை யாழ்ப்பாண பகுதியில் இருந்து காவி சென்ற வள்ளம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Ahamed Shareem Mohamed Shihab (வயது 45), அவரின் மனைவி Fathima Farzana Markar (வயது 39), அவர்களின் 10 வயது மகன் ஆகியோரே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 2014 ஆம் ஆண்டு இலங்கையில் Privelth Global Private Ltd. (www.privelth.com) என்ற திருட்டு நோக்கம் கொண்ட நிறுவனம் ஒன்றை அமைத்து சுமார் 1,200 கோடி இலங்கை நாணயத்தை முதலீடு செய்தோரிடம் இருந்து திருடி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருட்டு தொடர்பாக கடந்த மாதம் இலங்கை பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு 03 இல் உள்ள Deanston House இல் தலைமையகத்தை கொண்ட இந்த நிறுவனத்துக்கு சம்மாந்துறை, கல்முனை, ஏறாவூர், பொத்துவில், நிந்தவூர் ஆகிய இடங்களில் கிளைகளும் உண்டு.

கோடியக்கரை மீனவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வெள்ளி இரவு 10:00 மணியளவில் கரைக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதலில் இவர்கள் பொய் பெயர்களை வழங்கி இருந்தாலும், அவர்களின் அடையாள ஆவணங்கள் மூலம் அவர்களின் உண்மை பெயர்கள் அறியப்பட்டு உள்ளன.