சிறுகதை: தோசை

சிறுகதை: தோசை

(இக்கதை 5/2/1993 அன்று தாயகம் பத்திரிகையில் வெளிவந்திருந்தது)

“எழுநூற்றி ஐம்பது, அல்லது சுருக்கமாக ஐம்பது. இது யாழ்ப்பாண குடாநாட்டின் முன்னிலை பஸ் இலக்கம். அந்த பஸ்ஸில் ஒரு மூலையில் வாத்தியார். அவரும் யாழ்ப்பாண குடா நாட்டின் முன்னிலை பிரசைகட்கு ஒரு உதாரணம். அவரின் மடியில் கூடை நிரம்ப மீன், காய்கறி. வாத்தியார் அருகில் ஒரு வாலிபன்.

“தம்பி, நீர் இயக்கமோ?” அருகில் இருந்த வாலிபனிடம் அன்புடன் கேட்டார் வாத்தியார்.

“இல்லை பெரியவர்… நான் ஒரு இயக்கமும் இல்லை” பண்புடன் கூறினான் வாலிபன்.

“நான் ஏது இயக்கம் என்று கேட்கவில்லை… உம்மை பார்த்தால் அப்படி தெரியுது” தொடர்ந்தார் வாத்தியார். அவரின் வார்த்தைகளும் தொனியும் வாலிபனுக்கு மிதமாக மரியாதை செலுத்தின. அப்படி அவர் வெளியே மிக மரியாதையுடன் கதைத்தாலும், உள்ளே எரிமலையாய் கொதித்தார். எந்த நேரமும் அது வெடிக்க தயார் என்றாலும் மரியாதையுடன் தொடர்ந்தார்.

“நீர் சொல்ல விரும்பவில்லை போலும்…”
“சத்தியமாய் நான் ஒரு இயக்கமும் இல்லை பெரியவர்” வாலிபன் முடிந்தவரை நிரூபிக்க முனைந்தான்.

“அப்படி என்றால், அண்ணன், தம்பி எவராவது இயக்கமோ”

“அப்படியும் ஒருவரும் இல்லை…”

“குறைந்தது உங்கடை நண்பர்கள் யாரவது இயக்கமாய் இருக்கும் தானே?”

“சில நண்பர்கள் இயக்கங்களுக்கு போனவர்கள் தான், ஆனால் அவர்கள் போன பின் தொடர்புகள் இல்லை”

“அப்ப நீர் உறுதியாய் சொல்லுகிறீர் உமக்கு தெரிந்த அல்லது சொந்தத்தில் எவரும் இயக்கம் இல்லை எண்டு” வாத்தியாரின் குரல் சற்று சாதாரணமானது.

“சரியாய் சொன்னீங்கள்” என்றான் வாலிபன்.

வாத்தியாருக்கு அந்த வாலிபன் மீது இருந்த ‘பயபக்தி’ அறவே இல்லாமல் போனது. அவருள் குமுறிய எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களே இருந்தன. சிறிது நேரம் உரையாடல் எதுவும் இல்லை.

“அடி செருப்பாலை… எடடா மூதேவி உன்ரை சப்பாத்துக்காலை… உன்ரை சப்பாத்துக்காலை போட ஒரு வாத்தி என்ரை காலே கிடைச்சிருக்கு?” என்று குதித்தார் வாத்தியார். வாத்தியாரின் குமுறலுக்கு காரணம் அந்த வாலிபன் தன்னை அறியாமலேயே தனது சப்பாத்து காலை வாத்தியாரின் காலில் போட்டபடி உள்ளதுதான்.

வெகுண்டெழுந்த பையன் வேறு ஆசனத்தில் சென்று அமர்ந்தான்.

உரிய தரிப்பில் வாத்தியாரும் இறங்கி வேகமாக வீட்டை அடைந்தார். வாத்தியாரின் துணைவி வாத்தியார் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் பரப்பி வைத்தார்.

“என்னப்பா… இந்த மீனை வைத்து நான் என்ன செய்யிறது. இரவு சாப்பாடல்லே கொடுக்கிறம்? இதெல்லாம் சோத்துக்குத்தான் நல்லது.”

“சோறோ… அவங்கள் சத்தான சாப்பாடு மட்டும் தான் சாப்பிட வேணும். பாவம் பொடியள், உங்கடை சோற்றை சாப்பிட்டுவிட்டு நித்திரை முழிக்க முடியாமல் தூங்கி வழியப்போறாங்கள்… நீ, உன்ரை நினைப்புகளை விட்டுப்போட்டு நான் சொல்லுறதை செய். இரவுக்கு தோசை போடு. அந்த மீனிலை குழப்பு வை. மிச்சத்தை பொரி. எல்லாம் ஆறு மணிக்கு முடியவேணும். நான் உதிலை போட்டுவாறன்” என்ற வாத்தியார் அருகில் உள்ள வாசிகசாலை போனார்.

அங்கே வேறு பல வாத்தியார்கள் ‘கல்விமான்கள்’ உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். எல்லோரும் ஒரே குரல், கேள்வி இல்லை, எல்லாமே ஆதரவு பதில்கள்.

“சிலர் கேட்கினம் ஏனாம் பல இயக்கங்கள். ஒண்டு மட்டும் இருந்தால் போதாதோவாம். அதை பற்றித்தான் நாங்கள் கதைத்துக்கொண்டு இருக்கிறம்.” என்று ஏனையோர் தமது பேச்சை வாத்தியாருக்கு அறிமுகமாக்கினர்.

“அது பற்றி உங்கடை கருத்து என்ன? நாங்கள் எல்லோரும் சொல்லுறம் பல இயக்கங்கள் அவசியம் என்று. இப்போது இருக்கிறது எல்லாம் சரி என்கிறம்.” என்றார் இன்னொருவர்.

அவர்களை இடைமறித்த வாத்தியார், “நீங்கள் கொண்ட முடிபு சரிதான். ஆனால் உங்களுக்கு சரியான விளக்கம் இருக்குமோ என்று எனக்கு தெரியவில்லை. விளக்கமாய் சொல்லுறன் கேளுங்கோ… உதாரணத்துக்கு நாங்கள் மறுதலையை கருதுவம். எங்களிடம் ஒரே ஒரு இயக்கம், இயக்கம் பலமானது, தலைவர் ஒன்று, வலை வேலைப்பாடு மிக தரமானது, பரந்த அளவில் தாக்குதல், உலக அளவில் பிரச்சாரம், ஆமி அழியுது, பொடியள் முன்னேறுகிறான்கள்… இப்படி எல்லாம் நடந்தாலும் நாங்கள் இன்னொரு யதார்த்தத்தையும் புரிய வேணும். சிலவேளை எங்கடை பொடியளும் உயிருடன் பிடிபடலாம் தானே? ஏனோ அவனால் தற்கொலை செய்ய முடியவில்லை என்று வைப்போம்… இப்ப என்ன நடக்கப்போகுது?… சிலவேளை பிடிபட்டவன் ஒரு மேலிடம் என்றால் என்ன நடக்கும்?… அவனுக்கு தெரிந்த முகாம்கள், தொடர்புகள், தரவுகள் எல்லாவற்றையும் உடனடியாக மாற்ற முடியாது… முடிவு?… ஆமி உடனே வருவான், எல்லாருமே அகப்படவேண்டியதுதான். பாரிய இழப்புகள் கிடைக்கும். இப்படி நடப்பதற்கு எப்பவுமே சாத்தியங்கள் உண்டு.” என்ற வாத்தியார் தனக்கு சற்று விடுதலை கொடுத்து பின் தொடர்ந்தார்.

“ஆனால் நாங்கள் பல இயக்கங்களை வைத்திருந்தால் நிலைமை வேறாக இருக்கும். முன் சொன்னது ஒரு இயக்கத்துக்கு நடந்தால் மற்றையது வந்து முதலாவதை காப்பாற்றும். அதுதான் அச்சுவேலியிலும் ஒருதரம் நடந்தது. அதோடை மற்றை இயக்கங்களின் பலமும் குன்றாது இருக்கும். வெற்றியும் நிச்சயம்” என்று முடித்தார் வாத்தியார்.

உதைத்தான் நாங்களும் விளக்கமாய் கதைத்துக்கொண்டு இருந்தனாங்கள் என்றனர் மற்றவர். அவர்களுடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு வீடு சென்று உறங்கினார். துணைவியார் சமையலில் முழுமூச்சு.

வெளியே வீதியில் வாகனங்கள் வேகப்பாச்சல். வாத்தியாரின் துணைவியார் தெருவுக்கு சென்று சிலருடன் கதைத்தார். மறுபுறமும் சென்று கதைத்தார். வெகுண்ட முகத்துடன் வீடு வந்து வாத்தியாரை எழுப்பினார்.

“உங்களுக்கு நடந்தது தெரியுமே?… சிறிசை பெரிசு தடை செய்து போட்டுதாம். பல இடங்களிலை சூடுபாடாம். சிறிசை தேடி பிடிக்கிறாங்களாம்…யாரும் அவயளுக்கு உதவக்கூடாதாம்… அப்படி உதவினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமாம்… நாங்கள் என்னப்பா செய்யிறது?” துணைவியார் கிலிகொண்டு இருந்தார்.

“நீ என்ன விசர் கதை பேசுறாய்?… இரு நான் என்ன எண்டு பார்த்து வாறன்” என்ற வாத்தியார் தெருவுக்கு போனார்.

சில நிமிடங்களில் திரும்பி வந்த வாத்தியார், “நீ அக்கம்பக்கத்திலை யாருக்காவது நாங்கள் இண்டைக்கு சிறிசுக்கு சாப்பாடு கொடுக்கிறம் எண்டு சொன்னனியே?” என்றார்.

“இல்லையப்பா”

“வடிவாய் யோசித்து சொல்லு”

“உறுதியாய் தான் சொல்லுறன்”

“மாயவா தப்பினன்… நீ, தோசையை கட்டு”

“வேண்டாமப்பா… பெரிசு அறிந்தால் சுட்டுப்போடுவாங்கள்”

“அடியே…நான் வாத்தியடி” என்ற வாத்தியார் தோசையுடன் வீதிக்கு வந்தார். சந்தியில் பொடியள். சிறிசு அல்ல, பெரிசு.

“தம்பி… நீர் பெரிசே?” உறுதிப்படுத்தினார் வாத்தியார்.

“யோவ்… சிறிசு, பெரிசு எல்லாம் கிடக்கட்டும், பெட்டிக்கை என்ன?… நான் சோதனை செய்ய வேணும்.”

“இல்லைத்தம்பி… உங்களுக்கு எண்டு நாங்கள் தோசை சுட்டனாங்கள்… பாவம், களைத்துப்போயிட்டியள்… போராட்டத்தின் முதல் விடுதலையே இன்றுதான். உந்த பீடைகளை முதலிலை கலையவேணும்”

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும், நீர் இதை எல்லோருக்கும் கொண்டுபோய் நீட்டும்…காணாவிட்டால், போய் இன்னும் சுட்டு வாரும்.”

“நான் சுட்டு வாறன் தம்பி, அதுக்கு முன் ஒன்று சொல்லுறன்… ஒரேயொரு இயக்கம் தான் போராட்டத்துக்கு நல்லம். ஒருத்தரையும் விடாதையுங்கோ” வீடு திரும்பினார் வாத்தியார்.