சில JCPOA உடன்படிக்கைகளில் இருந்து ஈரான் வெளியேற்றம்

Iran

தாம் சில JCPOA என்ற அணுசக்தி உடன்படிக்கைகளில் இருந்து வெளியேறுவதாக ஈரான் இன்று புதன் அறிவித்து உள்ளது. பதிலுக்கு அமெரிக்கா ஈரானின் இரும்பு, உருக்கு, அலுமினியம் ஆகிய ஏற்றுமதிகள் மீதும் புதிய தடைகளை விதித்துள்ளது.
.
ஒபாமா காலத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட JCPOA என்ற அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து ரம்ப் அரசு தன்னிசையாக வெளியேறி இருந்தது. ஆனால் ஏனைய நாடுகள் ஈரானை தொடர்ந்து உடன்படிக்கைக்கு இணங்க செயல்படுமாறு கூறி வந்தன. ஆனாலும் இந்த நாடுகளால் JCPOA உடன்படிக்கைக்கு அமைய ஈரானின் நலனை பாதுகாக்க முடியவில்லை. ரம்ப் அரசின் தண்டனைகளுக்கு பயந்து, அமெரிக்காவிலும் வர்த்தகம் செய்யும் காரணத்தால், ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறி இருந்தன. ஈரானில் இருந்து எண்ணெய்யை கொள்வனவு செய்வதையும் பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி இருந்தன.
.
இன்று ஈரான் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய 5 நாடுகளுக்கும் அனுப்பிய செய்தியில், வரும் 60 நாட்களுள் JCPOA உடன்படிக்கைக்கு அமைய ஈரானின் நலன்கள் பாதுகாக்கப்படாவிட்டால் தாம் முற்றாக JCPOA உடன்படிக்கையில் இருந்து வெளியேற உள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.
.
ரஷ்யாவும், சீனாவும் அமெரிக்காவின் தன்னிசையான நடவடிக்கைகளே இன்றைய குழப்பத்துக்கு காரணம் என்று கூறியுள்ளன.

.