சீனாவின் விண்ஆய்வுகூடம் சிலநாளில் விழும்

ChinaFlag

Tiangong-1 என்ற சீனாவின் விண் ஆய்வுகூடம் இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வாணில் இருந்து விழும் என்று கூறப்படுகிறது. இந்த விண் ஆய்வுக்கூடம் வளிமண்டலத்தில் நுழைந்த பின்பே விழும் நேரத்தையும், இடத்தையும் குறிப்பாக கூற முடியும் என்றும் கூறப்படுகிறது.
.
ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதே விண் ஆய்வு நிலைய அமைப்பில் (International Space Station) சீனா இணைவதை அமெரிக்கா தடுத்தபோது, சீனா தனது சொந்த விண் ஆய்வு நிலையத்தை கட்டும் பணியை ஆரம்பித்தது.
.
நிரந்தர ஆய்வுகூடத்தை கட்டுமுன், பயிற்சிகள் செய்யும் நோக்கில், சீனா Tiangong-1 என்ற ஒரு தற்காலிக ஆய்வு நிலையத்தை ஏவியது. இந்த ஆய்வு கூடத்துக்கு சீன விண்வெளிவீரர் இரண்டு தடவைகள் சென்று வந்தனர். ஆனால் இந்த ஆய்வுகூடத்தில் எவரும் தங்கியிருக்கவில்லை. அதற்கான வசதிகளும் இதில் இருந்திருக்கவில்லை.
.
சுமார் 18,000 இறாத்தல் எடை கொண்ட இந்த பயிற்சி ஆய்வுகூடம் 2011 ஆம் ஆண்டில் ஏவப்பட்டு இருந்தது. 2013 ஆம் ஆண்டின் பின் சீனா இந்த ஆய்வுகூடத்தை கட்டுப்படுத்தும் தகைமையை இழந்து இருந்தது என்று கருதப்படுகிறது. ஆனால் சீனா அவ்வாறான கருத்தை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
.
விழவுள்ள இந்த ஆய்வுகூடம் 43 பாகை வட அகலாங்குக்கும், 43 பாகை தென் அகலாங்குக்கும் இடைப்பட்ட பரப்பில் விழும் என்று கணிக்கப்படுள்ளது. இப்பகுதிகளில் பல பெரும் நகரங்கள் இருந்தாலும், இந்த ஆய்வுகூடம் நிலத்தில் விழமுன், உராய்வு காரணமாக, பெருமளவில் எரிந்துவிடும். முகில் கூட்டம் இல்லாது இருப்பின் சிலர் இதை காணக்கூடியதாக இருக்கும். வால்வெள்ளி போல் இது எரிந்துகொண்டு விழும்.
.
இறுதிவரை கட்டுப்பாட்டில் இருந்த 268,000 இறாத்தல் எடைகொண்ட USSRவின் MIR விண்கூடம் 2001 ஆம் ஆண்டில் (3/23/2001) திட்டமிட்டபடி பசுபிக் கடலுள் வீழ்த்தப்பட்டது.
.
அமெரிக்காவின் 169,950 இறாத்தல் எடைகொண்ட Skylab என்ற ஆய்வுகூடம் கட்டுப்பாடு இன்றி 1979 ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் வீழ்ந்திருந்தது.
.

சுமார் 43,000 இறாத்தல் எடைகொண்ட USSR அனுப்பிய Salyut 7, Salyut 6 ஆகிய கலங்கள் 1991 ஆம் ஆண்டிலும், 1982 ஆம் ஆண்டிலும் வீழ்ந்து இருந்தன.
.