சீனாவுக்கான உளவாளிகளை இழந்தது CIA

CIA

இன்று சனிக்கிழமை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான The New York Times வெளியிட்ட செய்தி ஒன்றின்படி, CIA சீனாவில் கொண்டிருந்த அனைத்து உளவாளிகளையும் இழந்து உள்ளதாம். சீன உண்மைகளையும், இரகசியங்களையும் CIAக்கு வழங்கி வந்திருந்த சுமார் 20 உளவாளிகள் 2011 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் திடீர்ரென மாயமாக மறைந்துள்ளனராம்.
.
இந்த பத்திரிகைக்கு செய்திகளை வழங்கிய ஆனால் தமது பெயரை வெளியிட விரும்பாத சுமார் 10 தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளின் தரவுகளின்படி 2011 ஆம் ஆண்டுவரை CIA சீனா தொடர்பான சிறந்த தரவுகளை பெற்று வந்திருந்ததாம். ஆனால் 2011 ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரையான காலத்தில் அணைத்து உளவாளிகளும் தொடர்புகள் இன்றி மறைந்துள்ளார்.
.
காணாமல் போயுள்ள உளவாளிகளுள் சுமார் 12 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களில் ஒரு உளவாளி அவருடன் தொழில் புரிந்த ஏனைய ஊழியர் முன்னிலையிலேயே சுட்டு கொல்லப்பட்டு உள்ளார் என்கிறது இந்த செய்தி. ஏனையோர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
.
எப்படி சீனா அணைத்து CIA உளவாளிகளையும் அடையாளம் கண்டது என்பது இன்னமும் CIAக்கு தெரியவில்லை. CIA உளவு தொடர்புகளை சீனா இடைமறித்து (hack) அறிந்ததா, அல்லது சீனாவின் உளவாளி CIAயுள் புகுந்து அறிந்ததா என்று தெரியவில்லை.
.

CIA மீண்டும் ஒரு உளவு அமைப்பை சீனாவில் உருவாக்க பல வருடங்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
.