சீனா, ஈரான் 25 ஆண்டு வர்த்தக ஒப்பந்தம்

சீனா, ஈரான் 25 ஆண்டு வர்த்தக ஒப்பந்தம்

சீனாவும், ஈரானும் 25 ஆண்டு கால வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் இன்று சனிக்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தப்படி சீனா $400 பில்லியன் பெறுமதியான முதலீட்டை ஈரானில் செய்யும். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மத்திய கிழக்கில் ஆளுமையை செலுத்தவும் வழிவகுக்கும்.

சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi, ஈரான் வெளியுறவு அமைச்சர் Javad Zarif ஆகியோர் ஈரான் தலைநகர் தெகிரானில் இன்று உடன்படிக்கையில் கையொப்பம் இட்டனர். ஈரானின் வங்கித்துறை, தொலைத்தொடர்பு, துறைமுகம், வைத்தியத்துறை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா முதலிட்டு அபிவிருத்தி செய்யும்.

அத்துடன் சீனா மலிந்த விலையில் ஈரானின் எரிபொருளையும் 25 ஆண்டுகளுக்கு பெறும். அதேகாலத்தில் இந்தியா சந்தை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் மிக பாதகமாக அமையும். அண்மைக்காலம் வரை இந்தியாவும் ஈரானும் நெருங்கிய உறவை கொண்டிருந்தன. ஆனால் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்தில், அவரின் உறவை வளர்க்கும் நோக்கில், இந்தியா ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்யும் எரிபொருளை கைவிட்டு இருந்தது. ஆனால் அமெரிக்காவின் வேண்டுகோளை புறக்கணித்து சீனா தொடர்ந்தும் ஈரானின் எரிபொருளை கொள்வனவு செய்து வந்தது.

ஒபாமா காலத்தில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈரானுடன் செய்திருந்த அணு உடன்படிக்கையையில் இருந்து வெளியேறிய ரம்ப் ஈரான் மீது கடுமையான தடைகளை விதித்து இருந்தார். ஆனாலும் பைடென் ஆட்சிக்கு வந்த பின்னும் தான் உதவி சனாதிபதியாக இருந்த காலத்தில் செய்த உடன்படிக்கையின்படி ரம்ப் விதித்த தடைகளை நீக்கவில்லை.

இந்த ஒப்பந்த பேச்சுக்களை 2016ம் ஆண்டு ஈரான் சென்ற சீனா சனாதிபதி Xi JinPing முன்வைத்து இருந்தார்.