தொலைந்த ஆர்ஜென்டீனா நீர்மூழ்கியின் படைகள் ஆபத்தில்

ArgentinaSanJuan

கடந்த புதன்கிழமை, நவம்பர் 15 ஆம் திகதி, தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் (Argentina) நீர்மூழ்கிகளில் ஒன்று இயந்திர கோளாறுகளுக்கு உட்பட்டதாக நீர்மூழ்கி குழு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி கோளாறு பாரதூரமானது என்று தெரிவித்து இருக்கவில்லை. ஆனால் அந்த நீர்மூழ்கி குழு மறுநாள் வியாழன் மேலதிக தொடர்புகள் எதையும் ஏற்படுத்தாத போது, அவர்களை தேடும் பணி ஆரம்பித்தது. இன்றுவரை அந்த நீர்மூழ்கியின் இடம் அறியப்படவில்லை. அந்த நீர்மூழ்கியில் இருந்த சுவாசத்துக்கு தேவையான வளி (oxygen) நேற்று 22 ஆம் திகதி வரையே போதுமானது. அதனால் அந்த நீர்மூழ்கியில் உள்ள படைகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன.
.
இந்த நீர்மூழ்கி சுமார் 34 வருடங்களுக்கு முன் ஜெர்மனியால் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி என்றாலும், அண்மை காலங்களில் புதுமை ஆக்கப்பட்டது. எதிரிகளின் திரைகளில் அகப்படாது மறைந்து இருக்கும் பொருட்டு பாவிக்கப்பட்ட சோனார் தடுப்பு (sonar deflection) போன்ற தொழில்நுட்பங்கள் தற்போது உரிமையாளர்களின் தேடும் பணிக்கும் இடராக உள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரேசில், சிலே போன்ற பல நாடுகள் இந்த நீர்மூழ்கியை தேடும் பணியில் தற்போது இறங்கி உள்ளன.
.
Ushuaia என்ற தளத்தில் இருந்து Mar del Plata என்ற தளம் நோக்கி பயணிக்கையில் காணாமல் போயுள்ள, சன் ஹுஆன் (San Juan) என்ற பெயர்கொண்ட, இந்த நீர்மூழ்கியில் 44 படையினர் இருந்ததாக கூறப்படுகிறது.
.

இன்று வியாழன் அமெரிக்க மற்றும் சர்வதேச அணு நடவடிக்கைகள் கண்காணிப்போர், தமது கடந்த கிழமை தரவுகளை ஆராய்ந்த பின், இந்த கடல் பகுதியில் ஒரு பாரிய வெடிப்பு இடன்பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும் கூறியுள்ளன. இச்செய்திப்படி 15 ஆம் திகதி 13:51 GMT மணிக்கு -46.12 அகலாங்கும், -59.69 நெட்டாங்கும் சந்திக்கும் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த செய்தி 44 படையினரின் உறவுகளையும் கலங்க வைத்துள்ளது.
.