பெய்ரூட்டை அழித்த வெடிபொருளின் பயணம்

பெய்ரூட்டை அழித்த வெடிபொருளின் பயணம்

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை (Beirut) செவ்வாய்க்கிழமை அழித்த பெரும் குண்டுக்கு நிகரான அளவு அமோனியம் நைரேட் (ammonium nitrate) ஒரு சாதாரண பயணம் மூலமே அங்கு சென்று முடங்கி இருந்தது. ரஷ்யாவில் இருந்து ஆபிரிக்க நாடான மொசாம்பிக் (Mozambique) சென்ற இந்த சுமை தற்செயலாகவே  பெய்ரூட் சென்றிருந்தது.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் Georgia வின் Batumi துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை இந்த 2,750 தொன் சுமை ஆரம்பித்து இருந்தது. இந்த சுமையை காவிய MV Rhosus என்ற கப்பல் ரஷ்ய நிறுவனத்துக்கு சொந்தமானது, ஆனால் Moldova வில் பதிவு செய்யப்பட்டது.

கருங்கடல் ஊடாக சென்று Mediterranean கடலை அடைந்த இந்த கப்பல் இயந்திர கோளாறு காரணமாக ஏதென்ஸ் அருகே 4 கிழமைகள் தரித்து நின்றது. மேற்கொண்டு திருத்த வேலைகளுக்காக இந்த கப்பல் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பெய்ரூட் துறைமுகம் சென்றது. கப்பலை சோதனையிட்ட துறைமுக அதிகாரிகள் கப்பல் கடலில் செல்லும் நிலையில் இல்லை என்று துறைமுகத்தை நீங்க தடை விதித்தனர்.

இந்நிலையில் கப்பலில் மேலும் சுமைகளை ஏற்ற கப்பல் உரிமையாளர் முனைந்து உள்ளனர். கப்பல் ஊழியர் அவ்வாறு மேலதிக சுமைகளை ஏற்றவில்லை. அதேவேளை கப்பல் உரிமையாளர் துறைமுக பாவனை கட்டணத்தையும் (port fee) செலுத்த தவறினர். அதனால் துறைமுக அதிகாரிகள் கப்பலை கையெடுத்தனர். உடனே கப்பல் உரிமையாளர் கப்பலையும், அதில் இருந்த சுமையையும் கைவிட்டனர். கப்பல், சுமை தொடர்பான விசயங்கள் நீதிமன்றம் சென்றன.

உணவு மற்றும் வசதிகள் அற்ற நிலையில் பெய்ரூட் நீதிபதி கப்பல் ஊழியர்கள் கப்பலில் இருந்து வெளியேறி தம் வீடு செல்ல அனுமதித்தார்.

அமோனியம் நைரேட் கப்பலில் இருந்தால் ஆபத்து என்று காரணத்தால் 2014 ஆம் ஆண்டு அவை துறைமுகத்தின் Warehouse 12 க்கும் மாற்றப்பட்டது. அந்த களஞ்சியத்துக்கு அருகிலேயே தானிய களஞ்சியங்களும் (silos) இருந்தன.

துறைமுக அதிகாரிகளான Hassan Koraytem (general manager), Badri Daher (director general) ஆகியோர் தாம் அமோனியம் நைரேட் ஆபத்தை பலதடவைகள் எடுத்துக்கூறி, அவற்றை வேறு இடத்துக்கு அகற்றுமாறு வேண்டியதாக கூறுகின்றனர். 2014 முதல் 2017 வரை குறைந்தது 6 தடவைகள் இவ்வாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு உள்ளன.

இந்த வெடிப்புக்கு 137 பேர் பலியாகியும், 5,000 காயமடைந்து உள்ளனர். Warehouse 12 இருந்த இடத்தில் தற்போது பெரிய குழி உருவாகி , கடல் நீர் நிறைந்து உள்ளது.

1995 ஆம் ஆண்டு Timothy McVeigh அமெரிக்காவின் Oklahoma வில் வெடிக்கவைத்த அமோனியம் நைரேட்டின் அளவு 2.5 தொன் மட்டுமே. அந்த குண்டுடன் ஒப்பிடுகையில், பெய்ரூட் வெடிப்பு 1,100 மடங்கு அதிக சக்தியை கொண்டது.