பைடென், பூட்டின் இன்று அவசர இணைய உரையாடல்

பைடென், பூட்டின் இன்று அவசர இணைய உரையாடல்

அமெரிக்க சனாதிபதி பைடெனும் ரஷ்ய சனாதிபதி பூட்டினும் அமெரிக்க நேரப்படி இன்று செவ்வாய் இணையம் மூலம் சுமார் 2 மணிநேர உரையாடல் ஒன்றை செய்தனர். அமெரிக்கா தற்போது சீன நெருக்கடியில் இருக்கையில் ரஷ்யாவின் நெருக்கடியை தவிர்க்க விரும்புகிறது. இந்நிலையில் தற்போது ரஷ்யா தனது படைகளை யுக்கிரைன் எல்லையில் குவிப்பதால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா.

இன்றைய உரையாடல் விபரங்கள், இணக்கங்கள் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.

தற்போது ரஷ்யா யுக்கிரைன் எல்லையில் குவித்துள்ள சுமார் 90,000 படைகளை அகற்றுமாறு அமெரிக்க சனாதிபதி பைடென் பூட்டின் மீது அழுத்தம் செய்யவிருந்தார். இப்படைகள் யுக்கிரைன் உள்ளே சென்றால் மிக கடுமையான வர்த்தக தடைகளை ரஷ்யா மீது நடைமுறை செய்ய உள்ளதாக பைடென் ஏற்கனவே கூறி உள்ளார்.

பூட்டின் ஏன் பெரும்தொகை படைகளை யுக்கிரைன் எல்லைக்கு நகர்த்தினார் என்று எவரும் இதுவரை அறியவில்லை. தமது நாட்டுள் தம் படைகளை எங்கும் நகர்த்தலாம் என்று கூறுகிறது ரஷ்யா.

யுக்கிரைன் NATO அணியில் இணைவதை தடுக்க நீண்டகாலமாக முனைகிறது ரஷ்யா. யுக்கிரைன் விரும்பினால் அது NATO அணியில் இணையலாம் என்கின்றன மேற்கு நாடுகள். யுக்கிரைனில் இருந்த ரஷ்ய ஆதரவு சர்வாதிகார ஆட்சியை விரட்டியபின் தற்போது மேற்கு ஆதரவு ஆட்சியே பதவியில் உள்ளது. அதேநேரம் Donetsk, Luhansk ஆகிய ரஷ்ய மொழிபேசும் கிழக்கு யுக்கிரைன் பகுதிகள் அரைகுறை சுதந்திர நாடாக செயற்பட ஆரம்பித்து உள்ளன. கிரைமியா ஏற்கனவே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டும் உள்ளது.

ரஷ்யாவின் அழுத்தத்துக்கு இன்னோர் விசயமும் காரணம் ஆகலாம். ரஷ்யாவில் இருந்து கடல் அடி குழாய்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவின் எரிவாயுவை வழங்கும் Nord Stream II என்ற திட்டம் தற்போது செயற்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது. அனால் அமெரிக்கா இதை தடுக்க முனைகிறது. ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்க எரிவாயுவை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்ய முனைகிறது அமெரிக்கா. தற்போதை அழுத்தத்தை பயன்படுத்தி ரஷ்யா Nord Stream II மீதான தடைகளை விலக்க முனையலாம்.

2011ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த Nord Stream I என்ற 1,222 km நீள கடல் அடி குழாய் ஏற்கனவே ஆண்டு ஒன்றில் 55 பில்லியன் கன மீட்டர் ரஷ்ய எரிவாயுவை ஐரோப்பா எடுத்து வருகிறது. Nord Stream I இத்தொகையை 110 பில்லியன் கன மீட்டர் ஆக இரட்டிக்கும்.