மீண்டும் சீன முதலீடுகளை இந்தியா ஏற்கும்

மீண்டும் சீன முதலீடுகளை இந்தியா ஏற்கும்

கடந்த செப்டம்பர் 15ம் திகதி சீன-இந்திய எல்லையோரம் நிகழ்ந்த கைச்சண்டைகளுக்கு 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் பலியாகிய பின் இந்தியா சீன நிறுவனங்கள் மீது பலத்த தடைகளை விதித்து இருந்தது. ஆனால் அந்த தடைகளை இந்திய மெல்ல விலக்க ஆரம்பித்து உள்ளது என்று அங்கிருந்து கசியும் உண்மைகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சீனாவின் Great Wall Motors என்ற வாகன தயாரிப்பு நிறுவனமும், SAIC Motor என்ற வாகன தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முனைந்து இருந்தன. அந்த முயற்சிகள் சண்டையின் பின் இந்தியாவால் இடைநிறுத்தப்பட்டு இருந்தன. ஆனால் அந்த இரண்டும் உட்பட மொத்தம் 45 சீன திட்டங்கள் மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கசியும் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் General Motors (GM) இந்தியாவை விட்டு வெளியேறும் நிலையில் சீனாவின் Great Wall Motors சுமார் $300 மில்லியன் பணத்துக்கு GM தொழிற்சாலையை கொள்வனவு செய்யவுள்ளது. அடுத்து வரும் சில ஆண்டுகளில் Great Wall Motors சுமார் $1 பில்லியன் முதலீட்டை இந்தியாவில் செய்யவுள்ளது. அதை இந்தியா இழக்க விரும்பவில்லை.

Great Wall Motors நிறுவனம் 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு மட்டும் அது 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்ககளை உலக அளவில் விற்பனை செய்திருந்தது.

SAIC Motor (Shanghai Automotive Industry Corporation) ஏற்கனவே சுமார் $400 மில்லியன் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. அது மேலும் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது. இது 2014ம் ஆண்டு சுமார் 4.5 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்திருந்தது.