மேலும் உரமாகும் சீன-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக வலயம்

மேலும் உரமாகும் சீன-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக வலயம்

சீனாவுக்கும் நியூசிலாந்துக்கு இடையே நடைமுறையில் இருந்து வந்த சுதந்திர வர்த்தக வலயம் செவ்வாய்க்கிழமை முதல் மேலும் உரமாகியுள்ளது. உரமாக்கப்பட்ட வர்த்தக வலயம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல பொருட்கள் வரிகள் இன்றி நகர உதவுகிறது.

2008ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயம் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் தற்போது மீண்டும் மீளாய்வு செய்யப்பட்டு, மேலும் உரமாக்கப்படும் உள்ளது. உதாரணமாக நியூசிலாந்தின் பால் உணவுகள் 2024ம் ஆண்டு அளவில் வரி எதுவும் இன்றி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

நியூசிலாந்து ஐந்து கண்கள் (Five Eyes) என்ற அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய மேற்கு சார்ந்த நாடுகளை உள்ளடக்கிய அணியில் அங்கம் என்றாலும் அது சீனாவுடன் வர்த்தகத்தை வளர்க்க விரும்புகிறது. சீனாவே நியூசிலாந்தின் மிகப்பெரிய வர்த்தக உறவு நாடாகும்.

அதேவேளை அஸ்ரேலியா முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் வழியில் சென்று சீனாவுடன் பகைத்துக்கொண்டதால் 2015ம் ஆண்டு நடைமுறைக்கு வந்திருந்த சீன-அஸ்ரேலிய சுதந்திர வர்த்தக வலயம் தற்போது முடங்கி உள்ளது. ரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப அஸ்ரேலியா சீனாவின் Huawei 5G தொழில்நுட்பத்தை தடை செய்திருந்தது. அதனால் விசனம் கொண்ட சீனா அஸ்ரேலியா மீது தடைகளை நடைமுறை செய்தது.

2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீன-அஸ்ரேலிய சுதந்திர வர்த்தக வலயம் 2018ம் ஆண்டில் முறுகல் நிலை காரணமாக மீளாய்வு செய்யப்பட்டு இருக்கவில்லை.