ரஜனியின் புதிய கட்சி

Rajani

தமிழ்நாட்டு நடிகர் ரஜனிகாந்த் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக இன்று கூறியுள்ளார். வரும் தமிழ்நாடு தேர்தலில் தனது புதிய சுதந்திர கட்சி அனைத்து (234) தொகுதிகளிலும் போட்டியிடும் என்றுள்ளார் ரஜனி.
.
தான் அரசியலுக்கு வருவதற்கு புகழ் அடைவதோ, அல்லது பணம் சேர்ப்பதோ காரணம் அல்ல என்று கூறிய ரஜனி, மக்கள் தனக்கு போதுமான புகழையும், பணத்தையும் ஏற்கனவே தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தான் அரியாசனத்துக்கும் ஆசைப்படவில்லை என்றும், அதற்கான சந்தர்ப்பம் 1996 ஆம் ஆண்டில் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது 45 ஆவது வயதில் விரும்பாத அரியாசனத்தை எதற்காக 68 வயதில் விரும்புவேன் என்றும் அவர் வினாவியுள்ளார்.
.
அரசியல் தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்ததாக உள்ளது என்றும், சனநாயகம் ஆபத்தில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் மக்களின் தலைகளை அவமானத்தில் தொங்க வைத்துள்ளன என்றும் கூறியுள்ளார். மற்றைய மாநிலத்தவர் தமிழ்நாட்டை பார்த்து சிரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
.
நேர்மையான, வெளிப்படையான, சமய மற்றும் சாதி பாகுபாடுகள் அற்ற, ஞானம் நிறைத்த அரசே தனது விருப்பம் என்றுள்ளார் ரஜனி. அது இலகுவான காரியம் அல்ல என்றும், மக்களின் ஆதரவு தனக்கு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
.
முற்காலங்களில் அரசர்கள் அந்நிய நாடுகள் மீது போர் தொடுத்து, வெற்றி அடையும் போது அந்த அந்நிய நாட்டிடை கொள்ளையிடுவார். ஆனால் சனநாயகம் மூலம் ஆட்சிக்கு வரும் கட்சிக்காரர் பதவிக்கு வந்தபின் தமது சொந்த நாட்டை கொள்ளையிடுகின்றனர் என்றும் கூறுயுள்ளார்.
.
சினிமா வேறு, அரசியல் வேறு என்று கூறிய ரஜனி தனது கட்சிக்கு தொண்டர்கள் (cadre) வேண்டாம் என்றும், பாதுகாவலர் (guardians) வேண்டும் என்று கேட்டுள்ளார்.
.
தனது கட்சியின் மந்திரம் “நேர்மை, கடின உழைப்பு, வளர்ச்சி” என்றும் அவர் கூறியுள்ளார்.
.