ரோஹிங்கியரின் பங்களாதேச குடியுரிமைக்கு சவுதி அழுத்தம்

ரோஹிங்கியரின் பங்களாதேச குடியுரிமைக்கு சவுதி அழுத்தம்

பர்மாவில் இருந்து அகதிகளாக விரட்டப்பட்டு தற்போது சவுதியில் வாழும் ரோஹிங்கியா (Rohingya) மக்களில் குறைந்தது 54,000 பேருக்கு பங்களாதேச குடியுரிமையை வழங்குமாறு சவுதி பங்களாதேசத்தை அழுத்துகிறது. அதனால் சவுதியின் வேலைவாய்ப்பில் தங்கியுள்ள பங்களாதேசம் நெருக்கடியில் உள்ளது.

பல சந்ததிகளுக்கு முன் பல்லாயிரம் ரோஹிங்கியா மக்கள் சவுதிக்கு அகதியாக சென்று இருந்தனர். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுடன் தற்போது பெருமளவு ரோஹிங்கியா மக்கள் எந்த ஓரு நாட்டின் உரிமையும் இன்றி சவுதியில் உள்ளனர். தம் கையில் உள்ள ரோஹிங்கியா மக்களை பங்களாதேசம் மீது திணிக்க முனைகிறது சவுதி

தற்போது சுமார் 2 மில்லியன் பங்களாதேச தொழிலாளர் சவுதியில் பணியாற்றுகின்றனர். அவர்கள் சுமார் $3.5 பில்லியன் பணத்தை பங்களாதேசத்துக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில் சவுதியின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் தவிக்கிறது பங்களாதேசம்.

வறுமையில் உள்ள ரோஹிங்கியா மக்களுக்கு சவுதியும் குடியுரிமை வழங்க விருப்பவில்லை. வறுமையில் உள்ள ரொஹிங்கியாவுக்கு குடியுரிமை வழங்கினால், அவர்களின் உயர் வாழ்க்கைக்கு சவுதி பெரும் பணம் செலவிட நேரிடும். அதை சவுதி விருப்பவில்லை.

சவுதியில் அகதிகளாக உள்ள ரொஹிங்கியாவுக்கு அரபு மொழி மட்டுமே தெரியும். தமது வாழக்கையில் என்றைக்குமே பங்களாதேசம் செல்லாத, பங்களாதேச மொழி, வாழ்க்கைமுறை தெரியாத இவர்கள் அங்கு செல்ல விருப்பவில்லை. பர்மாவின் உரிமை கொண்டிருக்கவேண்டிய இவர்களிடம் கடவுச்சீடு போன்ற பர்மாவின் ஆவணங்களும் இல்லை.