வீட்டு வரி காரணமாக சீனாவில் விவாகரத்துக்கள்

ChinaHousing

சீனாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் விவாகரத்துக்களுக்கு புதியதோர் காரணி தோன்றியுள்ளது. அந்த காரணி வீட்டுவரி.

அதீத பொருளாதார வளர்ச்சியால் செல்வந்த சீனருக்கு தோன்றியுள்ளது இந்த புதிய தலையிடி. பணத்தில் மிதக்கும் பல சீன தம்பதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கி வைத்துள்ளனர். பெய்ஜிங் (Beijing), சங்காய் (Shanghai)  போன்ற பெரு நகரங்களில் சராசரி வீடுகளின் விலை தற்போது U$200,000 முதல் U$400,000.

இந்த வீடுகளின் விலைகள் விரைவில் சரியலாம் என்ற அச்சம் காரணமாக சிலர் தம்மிடம் உள்ள மேலதிக வீடுகளை விற்க முற்பட்டுள்ளனர். ஆனால் அங்குள்ள புதிய சட்டப்படி மேலதிக வீடுகளை வைத்திருந்தோர் அவற்றை 5 வருடத்துள் விற்பனை செய்யும்போது அடையும் இலாபத்தின் 20% ஐ வரியாக அரசுக்கு செலுத்துதல் அவசியம். அதனால் இவ்வகை சிக்கலில் உள்ள தம்பதியினர் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு ஒரு வீட்டின் உரிமையாளர் ஆகி, பின் விவாகரத்து செய்வதன் மூலம் இந்த வரியில் இருந்து தப்புகின்றனர். சட்டப்படி இவர்கள் விவாகரத்து செய்யினும் உண்மையில் இவர்கள் கூட்டாகவே இதை செய்கின்றனர்.

உதாரணமாக பெய்ஜிங்கில் உள்ள மாஒ தம்பதியினர் தம்மிடம் உள்ள இரண்டாம் வீட்டை சுமார் $280,000 இக்கு  விற்பனை செய்ய முன் இவ்வாறு விவாகரத்து செய்துள்ளனர். இதனால் இவர்கள் சுமார் $56,000 வரையான வரி பணத்தை சேமித்துள்ளனர்.

பெய்ஜிங்கில் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 39,000 இக்கும் அதிக விவாகரத்துக்கள் பதியப்பட்டுள்ளன. இது கடந்த வருடத்தை விட 40% அதிகம்.