வேனேசுவேலாவுக்கு ஈரானின் எண்ணெய், ரம்ப் குழப்பத்தில்

Venezuela

அமெரிக்கா முழுமையாக பகைத்துக்கொண்ட நாடுகளில் மத்திய கிழக்கில் உள்ள ஈரானும், தென் அமெரிக்காவில் உள்ள வேனேசுவேலாவும் (Venezuela) அடங்கும். வெவ்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா இரண்டு நாடுகளுடனும் பகைத்து கொண்டாலும், அவை இரண்டும் தற்போது நண்பர்களாகி அமெரிக்காவை குழப்பத்துள் தள்ளி உள்ளன.
.
வேனேசுவேலா உலகத்திலேயே அதிகம் எண்ணெய்யை தனது நிலத்தடியில் கொண்டிருந்தாலும் அமெரிக்கா அதன் மீது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியாது உள்ளது. அதனால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
.
அதேவேளை ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடை காரணமாக ஈரானும் தனது எண்ணெய்யை இலகுவாக எல்லா நாடுகளுக்கும் விற்பனை செய்ய முடியாது உள்ளது.
.
இந்நிலையில் ஈரான் வேனேசுவேலாவுக்கு உதவ முன்வந்துள்ளது. அண்மையில் ஈரானின் விமானங்கள் சிலை  வேனேசுவேலாவுக்கு பெருமளவு அடையாளம் காணப்படாத பொருட்களையும் வழங்கி இருந்தன.
.
அத்துடன் தற்போது 5 மிகப்பெரிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள் 1.53 மில்லியன் பரல்கள் எண்ணெய்யை எடுத்து செல்கின்றன. Fortune (நீளம் 176 மீட்டர், அகலம் 31 மீட்டர்) என்ற முதலாவது எண்ணெய் கப்பல் வேனேசுவேலா நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 8:00 மணியளவில் வேனேசுவேலா கடலை அடையும் என்று கூறப்படுகிறது.
.
மேற்படி 5 கப்பல்களையும் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை கப்பல்கள் பலவற்றை அப்பகுதிக்கு நகர்த்தி இருந்தது. இதை அறிந்த ஈரான் தமது கப்பல்கள் தாக்கப்படால் தாம் அமெரிக்க படைகளை அவ்விடத்தில் மட்டுமன்றி (பாரசீக வளைகுடா உட்பட) எங்கும் தாக்குவோம் என்று கூறியுள்ளது. அதுமட்டுமன்றி வேனேசுவேலாவும் தமது படைகள் ஈரானின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்றுள்ளது.
.
ஆகவே சனாதிபதி ரம்ப் ஈரானின் கப்பல்களை தடுக்க கட்டளை வழங்கினால் அது யுத்தத்தில் முடியும் என்ற நிலையில் உள்ளது. வேனேசுவேலா மீதான தடை அமெரிக்காவின் தனிப்பட்ட தீர்மானம், ஐ.நா. வினது அல்ல. அதனால் ஈரானின் கப்பல்களை தடுக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை.
.
இவர்கள் இடையே மோதல்கள் இடம்பெறுமா என்பது மேலும் சில மணித்தியாலங்களுள் தெரிந்துவிடும்.
.
ஏற்கனவே இரண்டு அமெரிக்கர்கள் (முன்னாள் அமெரிக்க விசேட படை உறுப்பினர்) ஆயுதங்கள் மூலமான ஆட்சி கவிழ்ப்புக்கு வேனேசுவேலா சென்று உயிருடன் அகப்பட்டு உள்ளனர்.
.
ஐந்து கப்பல்களையும் தடுக்க ரம்புக்கு சில மணித்தியாலங்கள் மட்டுமே உள்ளன. தடுத்தால் சிறியதோர் யுத்தம் உண்டாகலாம். கரோனா மத்தியில் அமெரிக்கா யுத்தத்தை விரும்பாது. கப்பல்கள் வேனேசுவேலாவை அடைந்தால் எதிரிகளுக்கு அது பாரிய வெற்றியாகும். அத்துடன் மேலும் சில எதிரிகளும் கூட்டு சேரலாம்.
.