அங்கத்துவத்தில் ADBயை மிஞ்சும் AIIB

AIIB

1966 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊக்குவிப்பில், ஜப்பானை தலைமைப்படுத்தி உருவாக்கப்பட்டது ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB). தற்போது அதில் 67 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் ADBயின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை மிஞ்சவுள்ளது சீனாவால் உருவாக்கப்பட்ட AIIB (Asian Infrastructure Investment Bank). AIIBயில் தற்போது 57 அங்கத்துவ நாடுகள் உள்ளன. ஆனால் அந்த எண்ணிகள் மேலும் 20 ஆல் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
புதிதாக வேறு நாடுகள் AIIBயில் இணைவதற்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால முடிவு நாள் கடந்த வெள்ளிக்கிழமை ஆகும். கசிந்துவரும் செய்திகளின்படி மேலும் சுமார் 20 நாடுகள் AIIBயில் இணைய விருப்பம் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு 20 புதிய நாடுகள் இணையின், AIIBயின் மொத்த அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை 77 ஆகும். புதிய அங்கத்துவ நாடுகளின் விபரம் அடுத்த வருடத்தில் வெளியிடப்படும்.
.
சீனாவின் ஆதிக்கம் காரணமாக அமெரிக்காவும், ஜப்பானும் AIIBயில் இணைய மறுக்கின்றன. அத்துடன் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகள் AIIBயில் இணைந்தபோது அதை அமெரிக்கா வெறுத்து அறிக்கைகளும் வெளியிட்டு இருந்தது.
.
புதிதாக இணையவுள்ள நாடுகளில் கனடாவும் ஒன்று. இதை கடனா கடந்த மாதம் அறிவித்து இருந்தது. இதுவும் அமெரிக்காவை இவ்விடயத்தில் மேலும் பலவீனமடைய செய்யும்.
.

2016 ஆண்டில் மட்டும் AIIB சுமார் $1.2 பில்லியன் பெறுமதியான அபிவிருத்தி கடனை வழங்கவுள்ளது. அதில் ஒரு அங்கமாக $300 மில்லியன் கடன் உதவி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது பாகிஸ்தானில் ஒரு நீர்மின் நிலையம் அமைக்க பயன்படும். இந்த திட்டத்துக்கு உலக வங்கியும் ஒரு பகுதி கடனை வழங்குகிறது. பர்மாவில் கட்டப்படவுள்ள மின் நிலையம் ஒன்றுக்கு $20 மில்லியன் கடனும் இந்த வருடம் AIIBயினால் வழங்கப்படும்.
.