அடுத்த ஆண்டு எல் நீனோ தாக்கம் அதி உயர் வெப்பத்தை தரும் 

அடுத்த ஆண்டு எல் நீனோ தாக்கம் அதி உயர் வெப்பத்தை தரும் 

அடுத்த ஆண்டு (2027) எல் நீனோ (El Nino, ஸ்பானிஸ் மொழியில் “little boy”) இலங்கை உட்பட பல இடங்களுக்கு அதி உயர் வெப்பத்தையும், வேறு பல இடங்களில் பெரு மழை வீழ்ச்சியையும் தரும் என்று பிரித்தானியாவின் Meteorological Office (Met Office) கூறியுள்ளது.

2027ம் ஆண்டில் உலகின் சராசரி வெப்பம் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அதி கூடியதாகவும் இருக்குமாம்.

சாதாரண காலங்களில் மத்திய கோட்டை அண்டிய கடல்களில் காற்று கிழக்கே இருந்து மேற்கு நோக்கி சாதாரணமாக வீசும். ஆனால் சில ஆண்டுகளுக்கு ஒரு தடவை (2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை) மேற்படி காற்றின் வேகம் குறையும், அல்லது கிழக்கு நோக்கி வீச ஆரம்பிக்கும். அதனால் பசுபிக் கடலில் வெப்பமான கடல் நீர் கிழக்கு நோக்கி பாயும். இதுவே இயற்கையில் இடம்பெறும் எல் நீனோ தாக்கமாகும்.

வழமைக்கு முரணான எல் நீனோ காலநிலை குழப்பம் உலகின் சில இடங்களில் வறட்சியை அதிகரிக்கும், வேறு சில இடங்களில் மழை வீழ்ச்சியை அதிகரிக்கும்.

எல் நீனோ தாக்கத்தால் தெற்கு ஆசியாவுக்கு மழை தரும் தென்மேற்கு மொன்சூன் (monsoon) குறைந்த அளவு மழை வீழ்ச்சியையே தரும்.

பசுபிக் கடலின் குறிப்பிட்ட சில இடங்களில் வெப்பநிலை சராசரியிலும் 0.5 C ஆல் அதிகரித்தால் எல் நீனோ தாக்கம் உருவாகும். ஆனால் இம்முறை இவ்விடங்களில் வெப்பநிலை 2.0 C ஆல் அதிகரித்து உள்ளது. ஆண்டு இறுதியில் இந்த வெப்ப அதிகரிப்பு 3.0 C ஆகலாம் என்கிறது Met Office.

தற்போது தினமும் 36 கப்பல்களை தன்னூடு பயணிக்க வசதி செய்யும் பனாமா கால்வாய் (Panama Canal) எல் நீனோ வறட்சி காரணமாக செப்டம்பர் 15ம் திகதி முதல் தினமும் 32 கப்பல்களை மட்டுமே பயணிக்க வசதி செய்யும் என்று அறிவித்து உள்ளது.