அமெரிக்காவின் கைப்பொம்மையாகிறது இந்தியா, என்கிறது ரஷ்யா

அமெரிக்காவின் கைப்பொம்மையாகிறது இந்தியா, என்கிறது ரஷ்யா

இந்திய-சீன விசயங்களில் இந்தியா அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் கைப்பொம்மையாக செயல்படுகிறது என்ற கருத்துப்பட கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov. அத்துடன் மேற்கு நாடுகள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவையும் துண்டாட முனைகின்றன என்றும் ரஷ்ய அமைச்சர் கூறியுள்ளார். மேற்படி கருத்துக்களை வெளியுறவு அமைச்சர் Russian International Affairs Council என்ற ஆய்வு அமைப்பில் கூறியுள்ளார்.

ரஷ்ய அமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு பேச்சாளர் Anurag Srivastava இந்தியா தனது சொந்த வெளியுறவு கொள்கைகளுக்கு ஏற்பவே செயற்படுகிறது என்றுள்ளார். இந்திய-சீன எல்லை முரண்பாடுகளை தீர்க்க இந்திய, சீன அதிகாரிகள் ரஷ்யாவில் சில மாதங்களுக்கு முன் கூடி இருந்தனர். ஆனால் திடமான அங்கு தீர்வுகள் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்தியா, அஸ்ரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்க முனையும் Quad என்ற பாதுகாப்பு அணி போன்றவற்றையே ரஷ்யா சாடியுள்ளது. இதை சிலர் ஆசியாவின் NATO என்று விபரிக்கின்றனர்.

தற்போது இந்தியா தனக்கு தேவையான ஆயுதங்களின் 60% பங்கை ரஷ்யாவிடம் இருந்தே கொள்வனவு செய்கிறது. ஆனால் அமெரிக்கா வழங்கும் அழுத்தம் காரணமாக அந்த வீதம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியா $12.8 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளது.

இஸ்லாமிய எதிர்ப்பு ரம்ப் ஆட்சியும், இஸ்லாமிய எதிர்ப்பு பா.ஜ. ஆட்சி கடந்த ஆண்டுகளில் நெருங்கிய உறவை கொண்டிருந்தன.