அமெரிக்காவிலிருந்து தமது தங்கத்தை நகர்த்தும் நட்பு நாடுகள் 

அமெரிக்காவிலிருந்து தமது தங்கத்தை நகர்த்தும் நட்பு நாடுகள் 

அண்மையில் நெதர்லாந்து தான் அமெரிக்காவில் பதுக்கி வைத்திருந்த தங்கத்தில் $10 பில்லியன் பெறுமதியான தங்கத்தை பிரித்தானியாவுக்கு நகர்த்தி உள்ளது. நெதர்லாந்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் தங்கத்தின் மொத்த பெறுமதி $83.7 பில்லியன் (612.4 தொன்).

இந்த நகர்வுக்கு நெதர்லாந்து “சந்தைப்படுத்த வசதியாக்கல்” காரணம் என்று கூறினாலும் அமெரிக்கா மீது ஏற்படும் நம்பிக்கை இன்மையே காரணம் என்று கருதப்படுகிறது.

இதுவரை நெதர்லாந்து தனது மொத்த தங்க கையிருப்பில் 31.3% த்தை அமெரிக்காவில் வைத்திருந்தது. மேற்படி நகர்வால் தற்போது அமெரிக்காவில் உள்ள கையிருப்பு 18.5% ஆக குறைந்து உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரான்ஸ் $17 பில்லியன் பெறுமதியான 129 தொன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து பிரான்சுக்கு நகர்த்தி இருந்தது.

2017ம் ஆண்டு வரையில் ஜேர்மனியும் $77 பில்லியன் பெறுமதியான 600 தொன் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு நகர்த்தி இருந்தது.

பெருமளவு தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசுகள்:

1) அமெரிக்கா: 8,133 தொன் 
2) ஜேர்மனி: 3,350 தொன் 
3) இத்தாலி: 2,451 தொன் 
4) பிரான்ஸ்: 2,437 தொன் 
5) சீனா: 2,313 தொன் 
6) ரஷ்யா: 2,304 தொன் 
7) சுவிஸ்: 1,039 தொன் 
8) இந்தியா: 880 தொன் 
9) ஜப்பான்: 845 தொன் 
10) துருக்கி: 534 தொன் 

இத்தொகைகள் அந்தந்த நாடுகளில் பொதுமக்கள் கொண்டிருக்கும் தங்கங்களை உள்ளடக்கா.