அமெரிக்கா-சவூதி முறுகல்

USA-Saudi

சவுதி அரேபிய அமெரிக்காவின் நீண்டகால நண்பன். நண்பன் என்பதைவிட சந்தர்ப்பவாத கூட்டாளிகள் எனலாம். சவுதிக்கான இராணுவ தளபாடங்கள், யுத்த விமானங்கள், எண்ணெய் உற்பத்திக்கான அறிவுகள், இயந்திரங்கள் எல்லாமே பெருமளவில் அமெரிக்காவினால் வழங்கப்பட்டது. அதேவேளை சவுதி அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தியது. அத்துடன் அமெரிக்காவின் ‘war on terror, இல் சவுதி ஒரு முக்கிய பங்காளி. ஆனால் அவர்களிடையே இப்போது முறுகல் நிலை தேன்றியுள்ளது.

சிரியாவில் நடைபெறும் யுத்தம் சுவுதி போன்ற நாடுகளாலேயே உருவாக்கப்பட்டது. சிரியாவின் தலைவர் அசாத், சுவுதியின் எதிரி. ஆசாத்தை அழிப்பது சவுதியின் முக்கிய குறிக்கோள். ஆனால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் யுத்தம் செய்த அமெரிக்கா மேலுமொரு மத்தியகிழக்கு யுத்தத்தை விரும்பவில்லை. அத்துடன் அதற்கான பொருளாதார வசதிகளும் அமெரிக்காவிடம் தற்போது இல்லை. அதனால் அமெரிக்கா சிரியா மீதான தாக்குதலை தவிர்த்தது. அதனால் கோபம் கொண்டது சவுதி.

எகிப்தில் ஜனாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட மோர்சி அரசை கவிழ்க்கவும் முன் நின்று உதவியது சவுதி. இந்த இராணுவ சதியை உலக அரங்கில் நியாயப்படுத்த முடியாது தவிக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா முபாரக்கை கைவிட்டதும் சவுதியின் கவலை.

இவற்றுக்கு எல்லாம் மேலாக ஈரானை கட்டுப்படுத்த தவிக்கும் நாடுகளில் ஒன்று சவுதி. மத்தியகிழக்கு பகுதியில் சவுதியின் (பெரும்பாலும் சுனி முஸ்லீம்) மேலாதிக்கத்துக்கு தடையாக இருப்பது ஈரான் (பெரும்பாலும் சியா முஸ்லீம்). அவர்கள் மீதும் அமெரிக்கா இராணுவ தாக்குதல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது சவுதி. அது அமெரிக்காவுக்கு சுலபமான காரியம் அல்ல – குறிப்பாக அமெரிக்காவின் இராணுவம் மத்தியகிழக்கு முழுவதும் பரந்திருக்கும்போது.

உலத்தின் முதலாவது எண்ணெய் உற்பத்தி நாடான சவுதி சுமார் $690 பில்லியனை அமெரிக்காவிலேயே முதலிட்டுள்ளது. அமெரிக்காவை பழிவாங்க விரும்பினாலும் சவுதிக்கு இருக்கும் மாற்று வழிகள் பலமற்றவையே.

தற்போது சுவுதியின் நட்பு நாடுகளில் ஒன்று இஸ்ரவேல்.