அமெரிக்கா, சீனா இடையே தூதுவர் இல்லை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது தூதுவர்கள் இன்றிய நிலை உருவாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் முறுகல் நிலையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. இருதரப்பிலும் தூதரகங்கள் இருந்தாலும் தற்போது தூதுவர்கள் இல்லை.

கடந்த ஆண்டு, ரம்ப் ஆட்சிக்காலத்தில், Terry Branstad என்ற சீனாவுக்கான அமெரிக்க தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டு இருந்தார். அனால் சனாதிபதி ரம்போ அல்லது பின் வந்த சனாதிபதி பைடெனோ சீனாவுக்கான புதிய தூதுவரை இதுவரை நியமிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான சீனாவின் தூதுவர் Cui Tiankai தான் சீனாவுக்கு திரும்புவதாக நேற்று Twitter மூலம் தெரிவித்து உள்ளார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக சீனாவுக்கான தூதுவராக அமெரிக்காவில் பணியாற்றியவர்.

அமெரிக்கா சீனாவுக்கான புதிய தூதுவரை இதுவரை அறிவிக்காதது போலவே, சீனாவும் இதுவரை அமெரிக்காவுக்கான புதிய தூதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை.

அதேவேளை அடுத்த கிழமை இத்தாலியில் இடம்பெறவுள்ள G20 மாநாட்டிலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Anthony Blinken, சீனா வெளியுறவு அமைச்சர் Wang Yi ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை திட்டமிடப்படவில்லை. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இடம்பெற்ற முறுகலாக பேச்சுக்களின் பின் இரு பகுதிகளுக்கும் இடையேயான நேரடி தொடர்புகள் குறைந்து வருகின்றன.