அமெரிக்க படைகளை நெருக்கும் செலவீன குறைப்பு

பாரிய வரவு-செலவு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க அரசு பல முனைகளிலும் செலவீன குறைப்பு செய்து வருகிறது. இதற்கு அமெரிக்க படைகளும் விலக்கல்ல. குறிப்பாக அமெரிக்க படைகளின் பெரும் செலவுகள் பின்போடப்பட்டு அல்லது இரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அமெரிக்க படைகளின் வல்லமைகளும் படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றன.

உதாரணமாக அமெரிக்காவின் 10 அணுசக்தி விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான USS Abraham Linclon க்கு மீள அணுசக்தி நிரப்பல் நடவடிக்கைகள் (இது இக்கப்பலின் mid-life திருத்த வேலையாகும்) தற்போது பின்போடப்பட்டுள்ளது. இந்த மீள் நிரப்பலுக்கு சுமார் U$ 1.5 பில்லியன் செலவாகும். ஆனால் இப்பெரும்தொகை தற்போதைய செலவு குறைப்பால் பின்போடப்பட்டுள்ளது. இதனால் USS George Washington இனது mid-life திருத்த வேலைகளும் பின் தள்ளப்படும்.

அது மட்டுமன்றி சுமார் $1.1 பில்லியன் பெறுமதியான தள புனரமைப்பு வேலைகளும், $608 மில்லியன் பெறுமதியான USS John F. Kennedy விமானம் தாங்கி கப்பலின் கட்டுமான வேலை, $557 மில்லியன் பெறுமதியான கப்பல் மற்றும் விமான செயற்பாடுகள், பல நூறு மில்லியன் பெறுமதியான இதர செயற்பாடுகள் என்பனவும் பின்போடப்பட்டுள்ளன.

அதேவேளை Pentagon, அதில் வேலை செய்யும் சுமார் 90,000 பொதுசன பணியாளர்களை 3-வார ஊதியம் இன்றிய விடுமுறையில் இவ்வருட இறுதியில் அனுப்பக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.