அமெரிக்க, ரஷ்ய கப்பல்கள் களங்களை நோக்கி

Syria
அண்மையில் அமெரிக்கா மத்தியதரை கடலில் (Mediterranean sea) நிலைகொண்டிருந்த தனது இரண்டு யுத்த கப்பல்களில் இருந்து 59 ஏவுகணைகளை ஏவியதன்பின் ரஷியா தனது யுத்த கப்பலான Admiral Grigorovich RFS-494லை  மத்தியதரை கடல் நோக்கி அனுப்பியுள்ளது. ரஷியாவின் இந்த யுத்த கப்பலும் ஏவுகணைகள் (cruise missile) ஏவும் வல்லமை கொண்டது.
.
ரஷ்யாவின் யுத்த கப்பல் சிரியாவின் Tartus துறைமுகத்தில் தங்கும் என்று கூறப்படுகிறது. Tartus கடற்படை துறைமுகம் தற்போது ரஷ்யாவின் கடுப்பாட்டிலேயே உள்ளது. அமெரிக்கா சிரியா மீது ஏவிய Tomahawk cruise ஏவுகணைகளுக்கு நிகரான Kalibr cruise ஏவுகணைகளை கொண்டுள்ளது ரஷ்யாவின் இந்த யுத்த கப்பல்.
.
அமெரிக்கா 59 ஏவுகணைகளை ஏவி இருந்தாலும், சிரியாவின் அதே Shayrat விமான தளம் 24 மணி நேரத்துள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ளது. இந்த விமான தளத்தில் இருந்து பறந்த விமானங்களே இரசாயண வீசியதாக அமெரிக்கா கூறியிருந்தது.
.
சிரியா இரசாயண ஆயுதம் பயன்படுத்தியதற்கான எந்தவித ஆதாரத்தையும் உலக நாடுகளின் முன் வைக்கவில்லை என்று கூறும் ரஷ்யா, இரசாயண ஆயுதங்களை அரச எதிர்ப்பு போராளிகள் அல்லது IS பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறுகிறது.
.
அதேவேளை கொரியா குடாவை நோக்கி அமெரிக்கா தனது விமானம் தாங்கி கப்பலான USS Carl Vinsonனை இன்று சனிக்கிழமை நகர்த்தி உள்ளது. சிங்கப்பூரில் நிலை கொண்டிருந்த Carl Vinson விரைவில் கொரியா குடாவை அடையும். இந்த விமானம்தாங்கி கப்பலில் ஏவுகணைகள் உட்பட பலதரப்பட்ட ஆயுதங்கள் உள்ளன.
.
சீனா வடகொரியாவை கட்டுப்படுத்தாவிடின் அமெரிக்கா வடகொரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் சிரியாவை போல் இன்றி, வடகொரியா இலகுவில் தாக்கக்கூடிய எல்லைக்குள், தென்கொரியாவில், பெருமளவு அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ளன.
.

இந்த மாதம் 15 ஆம் திகதி வடகொரியா மேலும் ஏவுகணைகளை ஒத்திகை பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. அத்தினம் வடகொரியாவை ஆரம்பித்தவரின் 105வது பிறந்த தினமாகும்.
.