அமெரிக்க விமானத்தை சீண்டிய ரஷ்ய விமானங்கள்

அமெரிக்க விமானத்தை சீண்டிய ரஷ்ய விமானங்கள்

நேற்று வெள்ளிக்கிழமை கருங்கடலின் (Black Sea) சர்வதேச வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் B-52 வகை குண்டுவீச்சு விமானத்தை ரஷ்யாவின் இரண்டு Su-27 வகை யுத்த விமானங்கள் ஆபத்தான முறையில் பல தடவைகள் சீண்டியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

மிகப்பெரிய B-52 விமானத்திலிருந்து 100 அடிக்கும் குறைவான தூரத்தில் ரஷ்ய விமானங்கள் பறந்து உள்ளன. அமெரிக்கா அந்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. அதனால் B-52 உலுக்கப்பட்டு உள்ளது.

Su-27 போன்ற சிறிய யுத்த விமானங்கள் இலகுவில் திசைதிரும்பி தப்பிக்கூடியன. ஆனால் B-52 போன்ற மிகப்பெரிய குண்டுவீச்சு விமானங்கள் இலகுவில் திரும்பி ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியாது. சுமார் 48.5 மீட்டர் நீளம், 56.4 மீட்டர் அகலம், 12.4 மீட்டர் உயரம் கொண்ட இவை 5 விமானிகளையும் 31,500 kg எடை கொண்ட குண்டுகளையும் காவக்கூடியன.

மேற்படி B-52 விமானம் வெள்ளிக்கிழமை 30 NATO நாடுகளுக்கு மேலால் பறந்ததாக அமெரிக்கா கூறுகிறது.

வியாழக்கிழமை அமெரிக்காவின் F-22 யுத்த விமானங்கள் 6 ரஷ்யாவின் Tu-142 வகை காவல் விமானங்களை (patrol aircraft) அலாஸ்கா (Alaska) பகுதியில் வழிமறித்து இருந்தன.

சோவியத் யூனியன் அழிந்த பின் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் குறைந்து இருந்தாலும், அண்மை காலங்களில் ரஷ்யாவின் இராணுவ நடவடிககைகள் மீண்டும் அதிகரித்து உள்ளன.