ஆப்கானிஸ்தானை நீங்கும் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில்

ஆப்கானிஸ்தானை நீங்கும் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில்

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் திடமான வெற்றி இன்றிய நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற ஆரம்பித்தாலும், சில படைகள் பாகிஸ்தான் தளம் ஒன்றில் நிலைகொள்ளும் என்று கூறப்படுகிறது. அத்துடன் நிலத்தால் சூழப்பட்ட (landlocked) ஆப்கானிஸ்தானில் உள்ள தலபானை தாக்க பாகிஸ்தானின் வான் வழியை அமெரிக்கா தொடர்ந்தும் பயன்படுத்தும்.

இந்த உண்மையை பாகிஸ்தான் அரசு தன் மக்களுக்கு தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவின் செனட் குழு ஒன்றுக்கு வழங்கிய அமர்வு ஒன்றில் இந்த உண்மையை வெளியிடப்பட்டு உள்ளது. மே மாதம் 21ம் திகதி David Helvey என்ற அமெரிக்க அதிகாரி பாகிஸ்தானுடனான இணக்கத்தில் “overflight and access to be able to support our military presence in Afghanistan” உள்ளது என்றுள்ளார்.

உண்மை வெளிவந்தாலும் பாகிஸ்தான் இராணுவம் அமெரிக்க படைகளின் இருப்பை மறுத்துள்ளது. ஆனால் உண்மையை அறிந்த தலபான் பாகிஸ்தானை இதுவரை இரண்டு தடவைகள் எச்சரிக்கை செய்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான முஷராப் 2002ம் ஆண்டில் அமெரிக்க படைகளின் பாவனைக்கு பாகிஸ்தானின் Shamsi தளத்தை வழங்கி இருந்தார். முஷாரப் 2008ம் ஆண்டு பதவியை நீங்கி இருந்தார். ஆனால் 2011ம் ஆண்டு அமெரிக்க படைகளுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு 24 பாகிஸ்தான் படையினர் பலியான பின்னரே உண்மை வெளிவந்தது.

அதேவேளை உஸ்பெக்கிஸ்தான், ரஜிகிஸ்தான் ஆகிய நாடுகளையும் அமெரிக்கா அணுகி இருந்தாலும், அவை அமெரிக்காவுக்கு தளங்களை வழங்க முன்வரவில்லை.