ஆர்ஜென்டீனாவின் BRICS இணைவுக்கு சீனா ஆதரவு

ஆர்ஜென்டீனாவின் BRICS இணைவுக்கு சீனா ஆதரவு

Brazil, Russia, India, China, South Africa ஆகிய 5 நாடுகள் இணைந்து உருவாக்கிய BRICS என்ற பொருளாதார அமைப்பில் தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனா (Argentina) இணைய சீனா இன்று வியாழன் ஆதரவு வழங்கி உள்ளது. G20 அமர்வுக்கு இந்தோனேசியா சென்றிருந்த சீன வெளியுறவு அமைச்சருடன் ஆர்ஜென்டீன வெளியுறவு சந்தித்த பின்னரே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளின் பொருளாதார ஆளுமைக்கு போட்டியா வளர்வதே BRICS பொருளாதார கட்டமைப்பு. 2001ம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்ட வேளையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே அங்கம் கொண்டிருந்தன. 2010ம் ஆண்டு தென் ஆபிரிக்காவும் இணைந்தது.

BRICS நாடுகளுக்குள் மிக பெரிய பொருளாதாரம் சீன பொருளாதாரம். அவற்றுக்கு இடையேயான மொத்த பொருளாதாரத்தின் 70% சீனாவினுடையது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவின் பொருளாதாரம் 13% பங்கை கொண்டது. ரஷ்யாவும், பிரேசிலும் தலா 7% பங்கை கொண்டன.

BRICS நாடுகளின் சனத்தொகை உலக சனத்தொகையின் 40%. ஆனால் இந்த 5 நாடுகளின் பொருளாதாரம் உலக பொருளாதாரத்தின் 26% மட்டுமே.

ஈரானும் BRICS அமைப்பில் இணைய விருப்பத்தை தெரிவித்து உள்ளது.