இந்தியாவின் செல்வந்தர் லண்டனுக்கு தப்பியோட்டம்

இந்தியாவின் செல்வந்தர் லண்டனுக்கு தப்பியோட்டம்

இந்தியாவில் கரோனா கடுமையாக பரவும் காரணத்தால் பிரித்தானியா இந்தியர்களின் வரவை தடை செய்ய தீர்மானித்த பின் குறைந்தது 8 சொகுசு விமானங்களில் இந்தியாவின் பெரும் செல்வந்தர் (super rich) லண்டனுக்கு  தப்பி ஓடியுள்ளதாக லண்டன் Times செய்தி வெளியிட்டு உள்ளது.

பிரித்தானியாவின் Red List தடை கடந்த வெள்ளி காலை 4:00 am மணிக்கு நடைமுறைக்கு வர இருந்த நிலையில், இந்தியாவில் இருந்து கடைசி சொகுசு விமானம் 3:15 am அளவில் லண்டன் விமான நிலையத்தில் இறங்கி உள்ளது. அந்த Bombardier Global 6000 வகை விமானம் டுபாயில் இருந்து வியாழன் மும்பாய் சென்று, அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு லண்டன் சென்றுள்ளது. மும்பாயில் இருந்து லண்டனுக்கான சுமார் 9 மணித்தியால பயணத்துக்கு சொகுசு விமானம் $138,000 கட்டணம் அறவிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சொகுசு விமானங்களில் பயணித்தோர் விபரங்கள் அறியப்படவில்லை. ஆனாலும் இவற்றுக்கான செலவு மிக அதிகம் என்றபடியால், பெரும் செல்வந்தரே பயணித்து இருப்பார். மும்பாய் செல்வந்தர் நிறைந்த நகரம்.

அதேவேளை டெல்லியில் கிளையை கொண்ட Air Charter Service India தமது சொகுசு விமானங்களின் சேவைக்கு என்றுமில்லாத வகையில் அழைப்புகள் வந்துள்ளதாக கூறுகிறது. வெள்ளிக்கிழமை தமது 12 சொகுசு விமானங்கள் இந்தியாவில் இருந்து டுபாய் சென்றதாகவும், அது அனைத்தும் நிரம்பி இருந்தன என்றும் கூறியுள்ளது.

மும்பாயை தளமாக கொண்ட Enthral Aviation என்ற சொகுசு விமான சேவையும் தமக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது. இந்த நிறுவனம் 13 ஆசனங்களை கொண்ட சொகுசு விமானம் ஒன்று மும்பாயில் இருந்து துபாய் செல்ல $38,000 அறவிடுவதாகவும், 6 ஆசன விமானத்துக்கு $31,000 அறவிடுவதாகவும் கூறியுள்ளது.