இந்தியாவை மிரட்டும் கரோனாவிலும் கொடிய Nipah

இந்தியாவை மிரட்டும் கரோனாவிலும் கொடிய Nipah

கரோனா பிடியில் தவிக்கும் இந்தியாவை தற்போது நீபா (Nipah, NiV) வைரஸ் தாக்கிக்குறது. கேரளா மாநிலத்தில் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த அதிகாரிகள் முனைந்து வருகின்றனர். அங்கு இந்த வைரஸ் 12 வயது சிறுவன் ஒருவனை பலியாக்கி உள்ளது.

ஒரு கிழமைக்கு முன் கடும் காச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வந்திருந்த சிறுவனின் இரத்தம் இந்திய National Institute of Virology க்கு அனுப்பப்பட்டு அங்கு செய்த ஆய்வுகள் நீபா தொற்றியமையை உறுதி செய்துள்ளன. சிறுவன் ஞாயிறு காலை மரணித்தான். சிறுவனின் வீட்டை சுற்றி 4 மைல் விட்ட பகுதி தற்போது மூடப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான தமிழ்நாடும் நீபா தொற்றை கண்காணித்து வருகிறது.

சிறுவனுடன் தொடர்பு கொண்டிருந்த 188 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 20 பேர் நெருங்கிய உறவினர். சிறுவனுக்கு வைத்தியம் செய்த இரண்டு வைத்திய பணியாளர் ஏற்கனவே நீபா அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்கிறது அரசு.

நீபா முதலில் மிருகத்தில் இருந்து மனிதனுக்கு தாவும் வைரஸ். பின் இது மனிதரிடையே தாவும். பழ வெளவால் (fruit bat) இந்த வைரசை காவும் பிரதான மிருகம். அதில் இருந்து நீபா பின் ஆடு, நாய், பூனை, குதிரை ஆகிய மிருகங்களுக்கும் தொற்றும். நோய் கொண்ட வௌவால் உண்ட பழத்தை உண்பது, அது குடித்த பழரசத்தை குடிப்பது மூலம் மனிதன் நீபா வைரஸை பெறலாம்.

நீபா தொற்றிய ஒருவருக்கு முதலில் கடும் காச்சல், தலையிடி ஏற்படும். சுமார் 3 தினங்கள் முதல் இரண்டு கிழமைகள் வரை நீடித்த காச்சல் இருமல், தொண்டை நோவுடன் தொடரும். இறுதியில் இது மூளையை பாதிக்க ஆரம்பிக்கும்.

1999ம் ஆண்டு மலேசியாவில் அறியப்பட்ட நீபாவுக்கு மருந்து எதுவும் தற்போது இல்லை. அதனால் 70% நீபா தொற்றாளர் மரணிப்பதாக WHO கூறுகிறது. கரோனா தோற்றாளரில் சுமார் 2% மட்டுமே மரணிக்கின்றனர். 2018ம் ஆண்டில் கேரளாவில் 18 பேருக்கு நீபா தொற்றி, அதில் 17 பேர் பலியாகி இருந்தனர்.