இந்திய iPhone தொழிற்சாலையில் ஊதியம் வழங்கப்படவில்லை

இந்திய iPhone தொழிற்சாலையில் ஊதியம் வழங்கப்படவில்லை

இந்தியாவின் பெங்களூருக்கு அண்மையில் உள்ள Narsapura பகுதியில் அமைந்துள்ள Wistron என்ற தாய்வான் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை Apple நிறுவனம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளது. Apple சுயமாக செய்த விசாரணையின் பின்னரே உண்மையை ஏற்று, மன்னிப்பு கேட்டுள்ளது. கூடவே குத்தகைக்கு தயாரிப்பு வேலைகள் செய்யும் Wistron நிறுவனத்துக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது Apple.

Wistron தனது இந்திய பிரிவுக்கு பொறுப்பாக இருந்த vice president ஒருவரை பதவி நீக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஊதியம் கிடைக்காத சுமார் 2,000 ஊழியர்கள் கடந்த கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர் தொழிற்சாலை உடமைகளையும், வாகனங்களையும் உடைத்து சேதப்படுத்தியிருந்தனர். சுமார் $7 மில்லியன் பெறுமதியான சேதனங்கள் ஏற்பட்டுள்ளதாக Wistron கூறியுள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக உள்ளூர் ஊழியர்களை பணிக்கு அமர்த்தாது, அரசியல் செல்வாக்கு கொண்ட உள்ளூர் வேலைவாய்ப்பு முகவர் மூலமே பணிக்கு அமர்த்தும்.

இந்த தொழிற்சாலையில் சிலவகை iPhone தயாரிக்கப்படும். இங்கு சுமார் 15,000 பேர் தொழில்புரிகின்றனர். உலக அளவில் Wistron நிறுவனம் சுமார் 83,000 ஊழியர்களை கொண்டுள்ளது.

Apple பொருட்களை குத்தகைக்கு தயாரிக்கும் Pegatron என்ற வேறு ஒரு நிறுவனமும் ஊழியர்களுக்கு பணம் வழங்காமை கடந்த மாதம் தெரியவந்திருந்தது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள Pegatron அலுவலகம் முன்னும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.