இலங்கைக்கு சீனா மேலும் $90 மில்லியன் நன்கொடை

இலங்கைக்கு சீனா மேலும் $90 மில்லியன் நன்கொடை

இலங்கைக்கு மேலும் $90 மில்லியன் நன்கொடை வழங்க சீனா முன்வந்துள்ளது. Yang Jiechi என்ற சீன வெளியுறவு அமைச்சு அதிகாரி வெள்ளிக்கிழமை இலங்கை பிரதமரை சந்தித்த பின்னரே இந்த நன்கொடை அறிவிப்பு வெளிவந்துள்ளது. Yang Jiechi இலங்கை சனாதிபதியையும் சந்தித்து உள்ளார்.

இந்த நன்கொடை வைத்திய, கல்வி, நீர் வழங்கல் துறைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இம்முறை IMF இன் உதவியை நாடாது சீனாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை. மேற்கு நாடுகள் IMF மூலம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்ற பயமே இலங்கை சீனாவை அணுக காரணம் என்று கருதப்படுகிறது.

கடந்த 55 ஆண்டுகளில் இலங்கை 16 தடவைகள் IMF இன் உதவியை நாடி உள்ளது. உலகத்திலேயே கடன் தொல்லையால் IMF உதவியை நாடிய நாடுகளில் இரண்டாம் நிலையில் உள்ளது இலங்கை. பாகிஸ்தான் 20 தடவைகள் IMF உதவியை நாடி முதலாம் இடத்தில் உள்ளது.

இலங்கை சுமார் $15 பில்லியன் குறுங்கால வெளிநாட்டு கடனில் உள்ளது. இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு கடன்களின் வட்டிகளை அடைக்க மட்டுமே பெருமளவு பணம் செலவிடப்படுகிறது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சீனா இலங்கைக்கு $500 மில்லியன் கடன் வழங்கி இருந்தது. சீனாவின் China Development Bank இலங்கைக்கு மொத்தம் $1.2 பில்லியன் கடன் வழங்க முன்வந்திருந்தது.

தற்போது இலங்கையின் கடன் இலங்கையின் GDP யின் 83% ஆக உள்ளது. இந்த ஆண்டு முடிவில் அது இலங்கை GDP யின் 100% க்கும் அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.