இலங்கை பொறியியலாளர்க்கு மலேசியாவில் கூலிவேலை

Malaysia

இலங்கையில் இருந்து பொறியியலாளர் வேலைக்கென மலேசியா சென்ற இரண்டு பேரை அவர்களின் வேலைவாய்ப்பு தரகர் தடுத்து வைத்து, கூலி வேலைக்கு அமர்த்தி உள்ளார். தப்பி ஓடிய இரண்டு இலங்கையரும் மலேசிய போலீசாரிடம் முறைப்பாடு செய்து உள்ளனர்.
.
Madusanka Perera Edirisinghe, Dushan Kavinda De Silva ஆகிய 21 வயதுடையோர் மலேசியாவில் பொறியிலாளர் தொழில் தருவதாக கூறி அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 8000 Ringgit (மலேசிய நாணயம், அல்லது U$ 2042) ஊதியமாக தருவதாகவும் இணங்கப்பட்டு இருந்தது.
.
மார்ச் 8ஆம் திகதி இரவு 11:00 மணியளவில் இரண்டு இலங்கையரும் கோலாலம்பூர் விமான நிலையம் சென்றுள்ளனர். அவர்கள் மறுநாள் 5:00 மணியளவில் Kuching என்ற இடத்துக்கு எடுத்து சென்று இரண்டு இந்தியரிடம் கையளிக்கப்பட்டு இருந்தனர். அங்கு இந்த இரண்டு இலங்கையரின் கடவு சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, பின் Sibu என்ற இடத்துக்கு படகு மூலம் மார்ச் 10ஆம் திகதி எடுத்து செல்லப்பட்டனர்.
.
Sibuவில் இந்த இருவரையும் கையேற்ற ஒரு 25 வயது இந்தியர், கார் ஒன்று மூலம் இரண்டு இலங்கையர்களையும் Stabau என்ற இடத்தில் உள்ள கப்பல் கட்டுமிடம் ஒன்றுக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு இரண்டு இலங்கையரும் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.
.
மார்ச் 17ஆம் திகதி தப்பி ஓடிய இரண்டு இலங்கையரும் மலேசிய போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
.
சம்பந்தப்பட்ட தரகர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இரண்டு இலங்கையரும் மார்ச் 23ஆம் திகதி இலங்கை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
.