இலங்கை, IMF இன்று அமெரிக்காவில் சந்திப்பு

இலங்கை, IMF இன்று அமெரிக்காவில் சந்திப்பு

இலங்கை அதிகாரிகள் இன்று திங்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் (Washington DC) உதவி தேடி சந்திக்கின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின் IMF உதவியை நாடுவது இது 17 ஆவது தடவை. ஏனைய நாடுகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் இலங்கை உதவி பெற்றது இதில் அடங்காது.

தற்போது இலங்கை $4 பில்லியன் உதவியை IMF இடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் IMF இலகுவில் பணத்தை அள்ளி வழங்காது. தனது எல்லா கடன்களையும் அடைக்க இலங்கை திட்டம் கொண்டுள்ளதா என்று IMF கணிக்கும். அத்துடன் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள IMF அரசியல் இலாபங்களையும் கணக்கிடும்.

இலங்கைக்கு தற்போது சுமார் $56 பில்லியன் கடன் உள்ளது. 2011ம் ஆண்டு, யுத்தம் முடிந்து 2 ஆண்டுகளின் பின், இலங்கையிடம் $25 பில்லியன் கடன் மட்டுமே இருந்தது. சீனாவுடன் அதிக கடன் உள்ளது என்று கூறப்பட்டாலும் உண்மையில் இலங்கையின் மொத்த கடனில் 10% கடனே சீனாவிடம் உள்ளது. ஜப்பானிடமும் 10% கடன் உள்ளது. இந்தியாவிடம் 2% கடன் உள்ளது.

தற்போது தெற்கே ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதாலும், எதிர்க்கட்சிகள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முனைவதாலும் IMF தனது நடவடிக்கைகளை சில காலம் பின்தள்ளவும் முனையலாம்.