இஸ்ரேல், பலஸ்தானில் மீண்டும் யுத்த நிறுத்தம்

இஸ்ரேல், பலஸ்தானில் மீண்டும் யுத்த நிறுத்தம்

கடந்த 11 தினங்களாக இடம்பெற்ற இஸ்ரேலுக்கும், பலஸ்த்தானுக்கும் இடையிலான யுத்தம் மீண்டும் நிறுத்தப்பட உள்ளது. உலக நாடுகளின் அழுத்தங்களை தொடர்ந்து நேற்று அமெரிக்க சனாதிபதி பைடெனும் யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டிருந்தார்.

அதன்படி இன்று கூடிய இஸ்ரேலின் அமைச்சரவை தாக்குதல்களை நிறுத்த இணங்கி உள்ளது. பலஸ்தீனர் தரப்பில் போராடிய ஹமாஸ்சும் தாக்குதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது. யுத்த நிறுத்தம் உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்றுள்ளது ஹமாஸ்.

இந்த 11 தின யுத்தத்துக்கு பலஸ்தீனர் தரப்பில் 232 பேர் பலியாகி உள்ளனர். அதில் 39 பெண்களும், 65 சிறுவர்களும் அடங்குவர். இஸ்ரேல் தரப்பில் 2 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர். காஸாவில் பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டும் உள்ளன. இஸ்ரேலில் பல வீடுகள் பாதிப்படைந்தன.

ஹமாஸ் சுமார் 4,000 சிறு ஏவுகணைகளை ஏவி இருந்தாலும், அதில் பல இஸ்ரேலின் Iron Dome என்ற ஏவுகணை தடுப்பு கணைகளால் ஆகாயத்திலே வெடிக்க வைக்கப்பட்டன. ஒரு சிறு தொகுதியே இஸ்ரேலில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தின.

பிரித்தானியா ஐ.நா. மூலம் $4.5 மில்லியன் பெருமைதியான அவசரகால உதவியை காஸாவுக்கு செய்ய முன்வந்துள்ளது.