ஈரான்-மேற்கு முதல்படி இணக்கம் இம்மாதம் 20 முதல் நடைமுறை

Iran-Nuclear

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய 6 பலம்மிக்க நாடுகளும் ஈரானும் அணுசக்தி விடயத்தில் இணங்கியுள்ள 6-மாத கால இடைக்கால இம்மாதம் 20 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது. வழமை போல் மூடிய அறைகளுள் பேசி தீர்மானிக்கப்பட்ட இந்த உடன்படிக்கை விபரங்கள் முற்றாக வெளியிடப்படவில்லை.

பகிரங்கப்படுத்தப்பட்ட விபரங்களின்படி எதிர்வரும் 6 மாத காலத்தில் ஈரான் தனது அணு வேலைகளை முற்றாக நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் 5% இற்கும் மேற்பட்ட யுரேனியம் 235 enrichment செய்ய மாட்டாது. அதை உறுதி செய்ய ஐ.நா. முகவர்களுக்கு மேற்பார்வை செய்ய அனுமதியும் வழங்கும். ஏற்கனவே உள்ள அணு நிலையங்களை மூடாவிடினும், புதிதாக எதையும் ஆரம்பிக்க மாட்டாது.

இதற்கு பதிலாக மேற்கு தடுத்து வைத்துள்ள ஈரானிய வருமானங்களில் சுமார் $4.2 பில்லியனை ஈரானுக்கு வழங்கும். அதன் முதல் கட்டமாக சுமார் $550 மில்லியன் வரும் முதாலம் திகதி வழங்கப்படலாம்.

ஈரான் அணுசக்தி உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. ஈரான் தமது அணுசக்தி உற்பத்தி மின்சக்தி போன்ற தேசநலன் பயன்பாடுகளுக்கு மட்டுமே அன்றி அணு ஆயுத பயன்பாடுகளுக்கு அல்ல என்கிறது. ஆனால் ஈரானின் பரம எதிரி இஸ்ரேல் உட்பட அமெரிக்கா நட்பு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. கடந்த சில வருடங்களாக ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் பல பிரமுகர்கள் நிராகரித்து கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். சுனி இஸ்லாத்தை சார்ந்த சவூதி அரேபியாவும் சியா இஸ்லாத்தை சார்ந்த ஈரானுடனான இந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. ஈரானுடன் அமெரிக்கா உறவுகளை வளர்த்துக்கொண்டால் சவுதி போன்ற தற்போதைய நட்பு நாடுகளை பகைத்துக்கொள்ள நேரிடலாம்.