உக்கிரம் அடையும் சீன, ஜப்பான் அரசியல் முறுகல் 

உக்கிரம் அடையும் சீன, ஜப்பான் அரசியல் முறுகல் 

அண்மையில் ஜப்பானின் பிரதமராக (முதலாவது பெண் பிரதமர்) தெரிவு செய்யப்பட்ட Sanae Takaichi தாய்வான் தொடர்பாக நவம்பர் 7ம் திகதி வெளியிட்ட கருத்து ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளது. அந்த முறுகல் நிலை நாளுக்கு நாள் தொடர்ந்தும் உக்கிரம் அடைகிறது.

தாய்வானை சீனா தாக்கினால் ஜப்பான் படைகள் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற தொனியில் அண்மையில் பிரதமரான கடும்போக்கு குணம் கொண்ட Takaichi கருத்து வெளியிட்டு இருந்தார்.

இதனால் விசனம் கொண்ட சீனா ஐ.நா. வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் சீனாவின் உள்நாட்டு விசயத்தில் ஜப்பான் தலையிடுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளது. ஐ.நா. சட்டப்படி தாய்வான் சீனாவுக்குரியது.

அத்துடன் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவு போன்ற பொருட்களின் கொள்வனவையும் சீன குறைத்து உள்ளது. கடல் உணவு ஏற்றுமதி ஜப்பானின் பிரதான ஏற்றுமதிகளில் ஒன்று. சீனாவில் இடம்பெறவிருந்த ஜப்பானின் இசை நிகழ்ச்சி ஒன்றையும் சீனா இரத்து செய்திருந்தது.

சீன உல்லாச பயணிகள் ஜப்பான் செல்வத்தையும் சீன அரசு தவிர்க்குமாறு கேட்டுள்ளது. இதனால் சீனாவுக்கும் ஜப்பானின் 12 இடங்களுக்கும் செல்லும் 41 விமான சேவைகள் திங்கள் தமது சேவைகளை இரத்து செய்துள்ளன. இது ஜப்பானின் உல்லாச பயண துறைக்கு பெரும் இழப்பாகும்.

முரண்பாட்டின் தொடராக தாய்வானை அண்டிய ஜப்பானின் Yonaguni பகுதியில் தனது ஏவுகணைகளை நிலை கொள்ள வைக்க உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

மேற்படி நகர்வுகளால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரம் அடைகிறது.