எதியோப்பிய விமானம் விபத்தில், 157 பேர் பலி

EthiopianAir

எதியோப்பியாவின் (Ethiopia) தலைநகர் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி (Nairobi) சென்ற Ethiopian Airlines விமானம் (Flight 302) கோளாறு காரணமாக வீழ்ந்ததில் 157 பேர் (149 பயணிகள் + 8 பணியாளர்) பலியாகி உள்ளனர்.
.
உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 8:38 மணிக்கு மேலேறி விமானம், 6 நிமிடங்களின் பின், 8:44 மணிக்கு வீழ்ந்துள்ளது. இந்த Boeing 737 MAX 8 வகை விமானம் 4 மாதங்களுக்கு முன்னர் சேவைக்கு வந்த புதிய விமானமாகும்.
.
இந்த விமானத்தில் 38 நாட்டவர் பயணித்து உள்ளனர். அதில் 32 கென்யர், 18 கனேடியர், 9 எதியோபியர், 8 அமெரிக்கர், 8 சீனர், 8 இத்தாலியர், 7 பிரெஞ்சுக்காரர், 7 பிரித்தானியர் ஆகியோரும் அடங்குவர்.
.
கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் Lion Air விமான சேவைக்கு சொந்தமான இன்னோர் Boeing 737 MAX 8 மேலேறி 13 நிமிடங்களுக்குள் வீழ்ந்ததில் 189 பேர் பலியாகி இருந்தனர்.
.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் விமானிகள் தாம் விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும், அதனால் விமான நிலையத்துக்கு திரும்பி வரவுள்ளதாகவும் கேட்டுள்ளார். ஆனால் இரண்டு விமானங்களும் மீண்டும் தரையிறங்க முன் வீழ்ந்துள்ளன.
.
உலகம் எங்குமுள்ள 78 விமான சேவை நிறுவனங்கள் சுமார் 5,110 Boeing 737 MAX வகை விமானங்களை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளன. அவற்றுள் சுமார் 350 விமானங்கள் சேவைக்கு வந்துள்ளன. மேற்படி இரண்டு விபத்திகளின் பின், பல விமான சேவைகள் தமது கொள்வனவுகளை மறுபரிசீலனை செய்யலாம்.
.