எரிபொருள் அமைச்சுக்கு தெரியாமல் LNG இணக்கம்?

எரிபொருள் அமைச்சுக்கு தெரியாமல் LNG இணக்கம்?

செப்டம்பர் மாதம் 17ம் திகதி இரவு இலங்கை அரசுக்கும், அமெரிக்காவின் New Fortress Energy (NFE) என்ற நிறுவனத்துக்கும் இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தி NFE நிறுவனத்தின் இணையத்திலும் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரி சாமத்திற்கு முன் வந்து, இரவு 12:06 மணிக்கு கையொப்பம் இட்டு, பின் அதிகாலை 2:00 விமானத்தில் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளார்.

ஆனாலும் இலங்கையின் எரிபொருள் அமைச்சர் (Minister of Energy) Udaya Gammanpila தனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது என்று புதன்கிழமை 29ம் திகதி கூறியுள்ளார். தான் மட்டுமன்றி, தனது அமைச்சில் இருந்து எவரும் கையொப்பம் இடலில் பங்கு கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இது நாட்டின் எரிபொருள் பாதுகாப்புக்கு சம்பந்தமானது என்றும், தான் இவ்வாறான ஒரு இணக்கத்தில் கையொப்பம் இடேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

NFE கூற்றுப்படி இந்த இணக்கம் அமெரிக்க நிறுவனம் 310 MW மின் உற்பத்தி செய்யும் Kerawalapitya மின் நிலையத்துக்கு LNG எரிவாயு வழங்கும் உரிமையை வழங்குகிறது. இந்த மின் உற்பத்தி நிலையம் 2035ம் ஆண்டு வரை இலங்கை அரசுக்கு மின் வழங்கும். அங்கு அமைக்கப்படவுள்ள இன்னோர் 700 MW மின் நிலையத்துக்கும் NFE எரிவாயு வழங்கும்.

அத்துடன் தற்போது இலங்கை அரசு West Coast Power (WCP) நிறுவனத்தில் கொண்டுள்ள 40% உரிமையையும் NFE $250 மில்லியன் பணத்துக்கு கொள்வனவு செய்கிறது. WCP நிறுவனம் 310 MW மின் உற்பத்தி செய்யும் Yugadanavi மின் நிலையத்தின் உரிமையை கொண்டது.

NFE கொழும்புக்கு அருகே மிதக்கும் LNG குதம் (floating LNG terminal) ஒன்றையும் அமைக்கவுள்ளது. இதன் மொத்த பெறுமதி சுமார் $6 பில்லியன் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.