ஒருவருட தடை, பணியாது வளர்ந்த கட்டார்

Qatar

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 5ஆம் திகதி சவுதி, UAE, பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் மீது கடுமையான தடைகளை விதித்திருந்தன. முதலில் மேற்கூறிய நான்கு நாடுகளும் ஈரானுடனான உறவை துண்டி, கட்டாரின் Al Jazeera தொலைக்காட்சி சேவையை நிறுத்து, கட்டாரில் நிலைகொண்டுள்ள துருக்கி இராணுவத்தை வெளியேற்று என்று பல நிபந்தனைகளை விதித்து இருந்தன. அவற்றுக்கு கட்டார் இணங்க மறுக்க, நான்கு நாடுகளும் கட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன. கட்டாரின் விமான சேவை தனது நாடுகள் மேலாக பறக்கும் அனுமதியும் இரத்து செய்யப்பட்டது.
.
ஆனாலும் கட்டார் அடிபணியாது மாற்றுவழிகளில் தன்னை பலப்படுத்தியது. உடனடியாக பல்லாயிரம் பால் மாடுகளை இறக்குமதி செய்து பால் உற்பத்தியை அதிகரித்தது. ஈரான், துருக்கி போன்ற நாடுகளில் இருந்து தேவையான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
.
தனது கையிருப்பில் இருந்த பணத்தை பொருளாதாரத்துள் முதலிட்டு கட்டாரின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாதும் பாதுகாத்தது கட்டார். 2016 ஆம் ஆண்டில் $31 பில்லியனை அந்நாட்டு மத்திய வங்கியின் கையிருப்பில் வைத்திருந்த கட்டார் கடந்த வருடத்தில் $15 பில்லியனை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால்  அத்தொகை $18 பில்லியன் ஆக தற்போது வளர்ந்துள்ளது. சுமார் $7 பில்லியன் செலவில் விரைவாக துறைமுகம் ஒன்றையும் கட்டி நேரடியாகவே இறக்குமதி, ஏற்றுமதியை செய்ய ஆரம்பித்தது கட்டார்.
.
இந்த தடையால் அதிகம் பாதிப்பு அடைந்தது Qatar Airways விமான சேவை மட்டுமே. இந்த விமான சேவை 18 நகரங்களுக்கான தனது சேவையை துண்டிக்க நேரிட்டது. அத்துடன் மிக பெரிய நாடான சவுதிக்கு மேலாக பறக்க முடியாததால், நீண்ட தூரம் சுற்றி பறந்து மற்றைய நாடுகளுக்கு செல்லவும் நிர்பந்திக்கப்பட்டது. அதனால் எரிபொருள் செலவும், மேலதிக நேர செலவும் அதிகரித்தது.
.
கட்டாரில் சுமார் 10,000 அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ளன.
.