காபூலில் 60 பொதுமக்கள், 12 அமெரிக்க படையினர் பலி

காபூலில் 60 பொதுமக்கள், 12 அமெரிக்க படையினர் பலி

காபூலில் இன்று வியாழன் இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 60 பொதுமக்களும், 12 அமெரிக்க படைகளும் பலியாகி உள்ளன. இந்த தாக்குதல்களை ISIS-K என்ற ஆப்கானிஸ்தான் ISIS குழுவே செய்ததாக கூறப்படுகிறது. தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் அங்கு ISIS குழுவும் பரவ ஆரம்பித்து உள்ளது. தலிபானும், ISIS குழுவும் பரம எதிரிகள்.

அத்துடன் 15 அமெரிக்க படையினரும், 140 பொதுமக்களும் காயமடைந்தும் உள்ளனர்.

மேற்படி தாக்குதல்களில் ஒன்று காபூல் விமான நிலையத்தின் Abbey Gate என வாசலிலும், மற்றையது அருகில் உள்ள Baron Hotel  அருகேயும் நிகழ்ந்துள்ளன.

இந்த தாக்குதலை தலிபான் முன்கூட்டியே அறிந்து இருந்ததா என்பதை அமெரிக்கா அறியவில்லை. தலிபானின் தடுப்புகளையும் மீறி எவ்வாறு ISIS-K விமான நிலையத்தை அடைந்தது என்பதுவும் இதுவரை அறியப்படவில்லை. விமான நிலையத்தின் வெளி பகுதிகளை தற்போது தலிபானே காவல் செய்கிறது.

விமான எதிர்ப்பு தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் வல்லமை அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு இருந்தாலும், தற்போது மக்களை வெளியேற்ற பயன்படும் வர்த்தக சேவை விமானங்களுக்கு அந்த வல்லமை இல்லை. அதனால் அவற்றின் சேவை தடைப்படலாம்.