கியூபாவில் கிளர்ச்சி, உணவு தட்டுப்பாடு காரணம்

கியூபாவில் கிளர்ச்சி, உணவு தட்டுப்பாடு காரணம்

கியூபாவில் பல்லாயிரம் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். கிளர்ச்சிகள் பல நகரங்களில் இடம்பெற்றுள்ளன. கரோனா காலத்தில் உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டமையும், உணவு பொருட்களின் விலை மிகையாக அதிகரித்தமையும் காரணம் என்று கூறப்படுகிறது.

கியூபாவில் இவ்வாறு அரச எதிர்ப்பு கிளர்ச்சிகள் இடம்பெறுவது மிக அருமை. தற்போதைய கிளர்ச்சிகள் நேற்று ஞாயிறு பிற்பகல் ஆரம்பித்து இருந்தன. சில கிளர்ச்சியாளர் பொலிஸ் மீது கல்லெறியும் செய்தனர். பெருமளவு கிளர்ச்சியாளர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

அதேவேளை அரச ஆதரவு மக்களும் பெருமளவில் பொது இடங்களில் கூடினர். தலைநகரில் உள்ள Maximo Gomez என்ற தூபியின் அருகேயும் பல்லாயிரம் அரச ஆதரவாளர் கூடினர்.

ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதார தடையால் அவதியுறும் கியூபாவை கரோனா மேலும் தாக்கியது.

கியூபா Abdala என்ற தனது சொந்த கரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. Abdala தடுப்பு மருந்து 92% பலனளிக்கும் தன்மை கொண்டது என்கிறது கியூபா. கியூபாவின் Soberana 2 என்ற இரண்டாம் தடுப்பு மருந்தும் விரைவில் அனுமதி பெறும் என்று கூறப்படுகிறது. ஈரான், அர்ஜென்டீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் கியூபாவின் தடுப்பு மருந்தை கொள்வனவு செய்ய விரும்பி உள்ளன.