சீனாவில் நரம்பு மூலம் ஆள் அடையாளம் காணல்

DeepBlue

பாதுகாப்பான இடங்களுக்குள் அனுமதி வழங்கல், வங்கிகள் போன்ற இடங்களில் ஆளை அடையாளம் கண்டு சேவை வழங்கல் போன்ற சேவைகளுக்கு முன்னர் password கொண்ட அடையாள அட்டைகள் (ID Card) பயன்படுத்தப்பட்டன. போலி அடையாள அட்டைகள், திருடப்பட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றின் பாவனை அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியது. அத்துடன் திருட்டுகளை தவிர்க்க வேறு வழிமுறை காணப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
.
அடையாள அட்டைகள் நம்பகத்தன்மையை இழந்த போது கை ரேகை (fingerprint reader), கண்விழி (iris reader) என்பவற்றை பயன்படுத்தி நபர் ஒருவரை அடையாளம் காணப்பட்டது. ஆனால் சில விவேகம் கூடிய திருடர்கள் கை ரேகை, கண்விழி போன்ற அடையாளங்களுக்கு போலிகள் தயாரிக்க வழி கண்டனர். மனிதரின் தசைக்கு ஒத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி ஒருவரின் கைவிரலுக்கு ஒத்த ரேகை கொண்ட விரல் செய்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர்.
.
இவ்வகை அடையாளம் காணல் முறைகளுள் உள்ள குறைபாட்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதிகள் கொள்ளையடிப்பதை தடுக்க தற்போது சீனாவின் நிறுவனம் ஒன்று புதிய வழிமுறையை உருவாக்கி உள்ளது. மனிதர்களின் கைகளின் உள்ளே உள்ள நரம்புகளை பயன்படுத்தி நபர் ஒருவரை அடையாளம் காண வழிகண்டுள்ளது DeepBlue என்ற சீன தொழிநுட்ப நிறுவனம்.
.
கை ரேகைகளை போலவே, நமது கைகளுக்கு உள்ளே உள்ள நரம்பு வலைப்பாடும் தனித்துவமானதாம். அது சிறு வயதில் இருந்து இறக்கும் வரை மாறாது இருக்குமாம். அதனால் DeepBlue நிறுவனம் கைகளில் உள்ள நரம்புகளின் வலைப்பாட்டை பயன்படுத்தி நபர் ஒருவரை அடையாளம் காணும் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது.
.