சீனாவில் 79 மாடி ஆட ஊழியர் தப்பியோட்டம்

சீனாவில் 79 மாடி ஆட ஊழியர் தப்பியோட்டம்

ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள சீன நகரமான சென்ஜென்னில் (Shenzhen) உள்ள 79 மாடி கட்டிடம் அறியப்படாத காரணம் ஒன்றால் செவ்வாய் பிற்பகல் ஆட, அங்கிருந்த ஊழியர்கள் இறங்கி தப்பி ஓடியுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட SEG Plaza என்ற இந்த மாடி ஏன் ஆடியது என்பது இதுவரை அறியப்படவில்லை.

அப்பகுதியில் நிலநடுக்கம் எதுவும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று இருக்கவில்லை. வானிலை அவதானிப்பு அங்கு சுமார் 27 km காற்றே வீசியதாக கூறியுள்ளது. அவ்வகை காற்று வீச்சு கட்டிடத்தை உலுக்க போதியதல்ல. இந்நிலையில் ஏன் சுமார் 300 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடம் ஆடியது என அறியாது குழம்பி உள்ளனர் அதிகாரிகள்.

நிலநடுக்கம், காற்று வீச்சுக்கு அப்பால், நிலம் தகரும்போதும் கட்டிடம் ஆடலாம் அல்லது ஐரோப்பாவில் உள்ள சாய்ந்த கோபுரம் போல் சரியலாம்.

மாடியில் இருந்த ஒருவர் கட்டிடம் ஆடியபோது தனது மேசையில் இருந்த தண்ணீர் போதல் ஆடி விழுந்ததாக கூறியுள்ளார்.

அப்பகுதியில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்துக்கு அனைத்தும் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு படையும் காவலில் உள்ளது. இந்த கட்டிடம் மீண்டும் எப்போது பாவனைக்கு விடப்படும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த கட்டிடம் இந்நகரில் 4வது உயர்ந்த கட்டிடம், சீனாவில் 104வது உயர்ந்த கட்டிடம்.