சீனா பக்கம் சாய்ந்தது பனாமா

NicaraguaCanal

பனாமா (Panama) என்ற மத்திய அமெரிக்க நாடும் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. பனாமாவுக்கு இன்று திங்கள் பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியும் (Xi JinPing) பனாமாவின் ஜனாதிபதியும் (Juan Carlos Varela) இன்று 19 உடன்படிக்கைகளில் கையொப்பம் இட்டுள்ளனர். பனாமாவும் சீனாவின் Belt and Road திட்டத்துள் ஒரு அங்கமாகிறது.
.
சீனா பனாமாவுள் நுழைந்தது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் பின்னடைவே. அத்திலாந்திக் சமுத்திரத்தையும், பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கும், சுமார் 82 km நீளம் கொண்ட,  பனாமா கால்வாய் அமெரிக்காவினாலேயே 1904 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையான காலத்தில் கட்டப்பட்டது.
.
முன்னர் கொலம்பியாவுக்கு சொந்தமாக இருந்த பனாமா பகுதியை, அமெரிக்கா தான் வளர்த்த பனாமா போராளிகளை பயன்படுத்தி பிரித்து தனி நாடாக்கி இருந்தது. உடனடியாக பனாமா கால்வாயையும் கட்டியிருந்தது. இன்று அந்த நாடு சீனா பக்கம் சாய்ந்துள்ளது.
.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரே பனாமா தாய்வானுடன் கொண்டிருந்த உறவை நிறுத்தி, சீனாவுடன் உறவை ஆரம்பதித்து இருந்தது. பனாமாவை தொடர்ந்து Dominican Republic, El Salvador ஆகிய இரண்டு நாடுகளும் தாய்வானை கைவிட்டு சீனாவுடன் உறவுகளை ஆரம்பித்து இருந்தன.
.
தற்போதும் பனாமா கால்வாயை அதிகம் பயன்படுத்துவது அமெரிக்காவே. இந்த கால்வாயை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக சீனா உள்ளது..
.
அமெரிக்கா பனாமாவை தண்டிக்க விரும்பினாலும், பனாமா கால்வாயை பயன்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த முடியாது. அமெரிக்காவின் கப்பல் போக்குவரத்துக்கு பனாமா மிக முக்கியம்.
.
பனாமா கால்வாய்க்கு பதிலாக நிக்கிரகுவா ஊடாக இரண்டாவது கால்வாயை கட்டவுள்ளதாக சீனா முன்னர் கூறியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

.